மிசோரமில் போதைப்பொருள் பறிமுதல்; 4 பேர் கைது
மிசோரமில் போதைப்பொருள் கடத்திய 3 மியான்மர் நாட்டவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
ஐஸ்வால்,
மிசோரமில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஜோட் தியாவ் கிராமத்தில் கலால் அதிகாரிகள் மற்றும் அசாம் ரைபிள்படை போலீசார் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் 2.2 கிலோ எடையுள்ள 20,200 மெத்தபெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மியான்மரின் சின் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்றொரு நடவடிக்கையில், ஐஸ்வால் மாவட்டம் அருகே உள்ள காட்லாவிலிருந்து 246 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மியான்மரின் கவ்மாவி கிராமத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 4 பேரை சாம்பாய் மற்றும் ஐஸ்வாலில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.