டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் காயம்

டெல்லி மக்கள் வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும் என அதிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update:2024-09-18 14:58 IST

புதுடெல்லி,

டெல்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு கொண்ட வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 12பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காலை 9.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் மீட்புப் பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து டெல்லி முதல்-மந்திரி அதிஷி தன்னுடைய எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

அங்கு வசிக்கும் மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக மாநகராட்சி மேயரிடம் பேசினேன். இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. டெல்லி மக்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தால், உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். மாநகராட்சி மற்றும் அரசு உங்களுக்கு உடனடியாக உதவும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்