பெற்றோர்களே கவனம் வையுங்கள்
பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு துணிவை ஏற்படுத்தும்.
நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா?
ஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?
வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.
பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...! ஏன்?
வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
“பாதகம் செய்வாரைக் கண்டால்
பயங் கொள்ளலாகாதுபாப்பா
மோதி மித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.
தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.
பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.
முதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.
“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.
“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.
“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.
மராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.
இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
-மறைமலை இலக்குவனார்