சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள்.. சென்செக்ஸ் 1,397 புள்ளிகள் உயர்வு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்டை நாடுகள் மீதான வரிகளை தாமதப்படுத்தியதால் பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன.;

Update:2025-02-04 16:59 IST

மும்பை:

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை தொடங்கியதால், சர்வதேச அளவில் வர்த்தக போர் குறித்த கவலை எழுந்துள்ளது. இதன் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. நேற்று பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.

இந்திய சந்தைகளிலும் இதன் தாக்கம் கடுமையாக இருந்தது. மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் பங்குச்சந்தைகளில் நம்பிக்கையை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உலகளாவிய சந்தையில் நிலவிய எதிர்மறையான போக்கு, இந்த நம்பிக்கையை தகர்த்ததால் இந்திய சந்தைகள் தடுமாறின.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 319.22 புள்ளிகள் சரிந்து, 77,186.74 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 121.10 புள்ளிகள் சரிந்து, 23,361.05 புள்ளிகளாக இருந்தது.

ஆனால், அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கான வரிவிதிப்பை ஒரு மாத காலத்திற்கு டிரம்ப் நிறுத்தி வைத்ததால் பங்குச்சந்தைகள் இன்று சரிவில் இருந்து மீண்டு ஏற்றம் பெற்றன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து 78,583.81 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 1,471.85 புள்ளிகள் வரை உயர்ந்து 78,658.59 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 378.20 புள்ளிகள் அதிகரித்து 23,739.25 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 புளூ-சிப் நிறுவனங்களில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் அதிக அளவில் லாபம் ஈட்டியது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வடைந்தன. இதேபோல் அதானி போர்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் அதிக லாபம் அடைந்தன. ஐடிசி ஹோட்டல்ஸ், சொமாட்டோ, நெஸ்லே, மாருதி ஆகிய நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தன.

ஆசிய சந்தைகளைப் பொருத்தவரை, சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் சந்தைகள் குறிப்பிடத்தக்க வகையில் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளில் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகம் நடைபெற்றது. அமெரிக்க சந்தைகளில் திங்கட்கிழமை சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.05 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 75.16 டாலர்களாக உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.3,958.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ததாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்