நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம்... ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.;

புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நடந்து வரும் 3-வது ஆட்சியில் முழு அளவிலான மத்திய பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து பேசினார். வரி குறைப்புக்கான நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான தேவை ஆகியவற்றை சமஅளவில் உள்ளடக்கிய பட்ஜெட்டாக இது பார்க்கப்படுகிறது.
2026-ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3-6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையானது நிலம், தொழில் ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்காக விதிகளில் தளர்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
இந்நிலையில், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, மாத சம்பளம் பெறும் நபர்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு வருவாய் ரூ.12 லட்சம் பெறுபவர்களுக்கு வருமான வரி இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது. 2023-ம் ஆண்டில் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சம் என்ற அளவில் உயர்த்தப்பட்டு இருந்தது. இந்த உச்ச வரம்பு ரூ.12 லட்சம் என்ற அளவில் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி முறையின் கீழ் திருத்தப்பட்ட வரி அடுக்குகள் மற்றும் வரி விகிதங்கள் வருமாறு:-
ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
ரூ.4-8 லட்சம் - 5 சதவீதம்
ரூ.8-12 லட்சம் - 10 சதவீதம்
ரூ.12-16 லட்சம் - 15 சதவீதம்
ரூ.16-20 லட்சம் - 20 சதவீதம்
ரூ.20-24 லட்சம் - 25 சதவீதம்
ரூ.24 லட்சத்திற்கு மேல் - 30 சதவீதம்
1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை நிதி மந்திரி உரையாற்றினார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் பிப்ரவரி 3-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.