உத்தர பிரதேசம்: மகா கும்பமேளா நிகழ்ச்சியில் மீண்டும் தீ விபத்து
பிரக்யராஜ்ஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள கூடாரம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.;
பிரக்யாராஜ்,
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மேலும் மத்திய மந்திரிகள், வெளிநாட்டு தூதர்கள் என ஏராளான பிரபலங்களும் கும்பமேளாவில் பங்கேற்று உள்ளனர்.
மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்றைய தினம் அதிகாலை திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மகா கும்பமேளாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18-ல் உள்ள கூடாரம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.