காஷ்மீரில் 47 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, காஷ்மீரில் ஆட்சியமைக்க தேவையான 46 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை கடந்து முன்னிலையில் உள்ளது.

Update: 2024-10-08 05:24 GMT

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது.

இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசாருடன், ராணுவமும் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதன் முடிவுகள் இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலின் முடிவுகள், காஷ்மீரின் முன்னாள் மந்திரிகளான தாரா சந்த், முசாபர் பெய்க், ராமன் பல்லா, பஷாரத் புக்கா மற்றும் உமர் அப்துல்லா, ரவீந்தர் ரெய்னா, யூசுப் தாரிகாமி உள்ளிட்ட பலரின் அரசியல் வாழ்வை முடிவு செய்யும் வகையில் அமையும் என பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வரும் சூழலில், தேர்தல் ஆணையம் இன்று காலை 10.15 மணியளவில் வெளியிட்டு உள்ள செய்தியில், காஷ்மீரில், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (ஜே.கே.என்.சி.) மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆனது, ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டிக்கான தொகுதிகளை கடந்து முன்னிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டணி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றினால், அந்த கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சியமைக்க கூடிய சூழலில், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என தெரிய வந்துள்ளது. இது ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை விட ஒன்று கூடுதல் ஆகும். எனினும், பா.ஜ.க. 28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்