கர்நாடக தேர்தல்: அனல்பறந்த அரசியல் கட்சிகளின் பிரசாரம் நிறைவு...!
கர்நாடக தேர்தலில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.;
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இதில், ஆண் வேட்பாளர்கள் 2 ஆயிரத்து 430 பேர், பெண் வேட்பாளர்கள் 180 பேர், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
இதில், பாஜகவில் 224 வேட்பாளர்களும், காங்கிரசில் 223 வேட்பாளர்களும், மதசார்பற்ற ஜனதா தளத்தில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மியில் 217 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். நடத்திர பேச்சாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்பட பல்வேறு தலைவர்கள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது. மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது. தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில் தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.