'ஜின்னா உயிரோடு இருந்திருந்தால் கூட....' - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீது பாஜக முதல்-மந்திரி விமர்சனம்
ஜின்னா உயிரோடு இருந்திருந்தால் கூட இதுபோன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கமாட்டார் என்று காங்கிரஸ் மீது பாஜக முதல்-மந்திரி விமர்சனம் செய்தார்.;
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களை கவர காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், மதம், சமுதாயம் இடையே வெறுப்புணர்வை பரப்பும் தனிநபர்கள், அமைப்புகள் மீது காங்கிரஸ் உறுதியான நடவடிக்கை எடுக்கும்.
சட்டம் மற்றும் அரசியலமைப்பு புனிதமானது என நாங்கள் நினைக்கிறோம். இவை பெரும்பான்மை அல்லது சிறுபான்மை மதங்களின் வெறுப்புணர்வை பரப்பும் வகையில் தனிநபர்கள், பஜ்ரங்தள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளால் மீறப்படக்கூடாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பஜ்ரங்தல் போன்ற அமைப்புகள் தடை செய்யபடும்' என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு பாஜக மூத்த தலைவரும், அசாம் முதல்-மந்திரியுமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை முழுமையான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் தேர்தல் அறிக்கை என்பதை காட்டியுள்ளது. ஜின்னா உயிரோடு இருந்தால் கூட அவர் இவ்வாறான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கமாட்டார். காங்கிரஸ் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் கட்சியாக மாறிவிட்டது. நமது உள்துறை அமைச்சகம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்துள்ளது. தற்போது பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கூறுகிறது' என்றார்.