பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது காங்கிரஸ் - பிரதமர் மோடி சாடல்
காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த அரசியலும் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம், வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டம் முல்கி பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான மோடி பங்கேற்றார்.
பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் அரசியல் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது. உலக அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு காங்கிரஸ் களங்கம் விளைவிக்கிறது. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான எதிரி காங்கிரஸ்' என்றார்.
பிரதமர் மோடி தனது பேச்சின் தொடக்கத்தில் 'ஜெய் பஜ்ரங்கபலி' (ஜெய் கடவுள் அனுமன்) என்று கோஷம் எழுப்பினார். அவர் இன்று முல்கி, அங்கொலா, பில்ஹொன்கல் ஆகிய 3 பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த மூன்று இடத்திலும் 'ஜெய் பஜ்ரங்கபலி' (ஜெய் கடவுள் அனுமன்) என்று கோஷம் எழுப்பினார்.
முன்னதாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.