முதலில் வெற்றி... பின்னர் தோல்வி... 16 வாக்கு வித்தியாசம்... கண்ணீர் விட்டு அழுத காங்கிரஸ் வேட்பாளர்
முதலில் காங்கிரஸ் வேட்பாளர் 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில், காங்கிரஸ் 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. பாஜக 66 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி படுதோல்வியடைந்ததுடன் ஆட்சியையும் இழந்துள்ளது.
இந்நிலையில், இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்ற ருசிகர சம்பவமும் அரங்கேறியுள்ளது.
ஜெயாநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளராக சவுமியா, மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக கலிகவுடா போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி 57 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 57 ஆயிரத்து 781 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் வெறும் 16 வாக்குகளேயாகும்.
அதேவேளை, மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் 1 ஆயிரத்து 226 வாக்குகள் பெற்றார். வாக்கு எண்ணிக்கை நேற்று இரவு வரை நீடித்த நிலையில் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட 177 தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி உள்பட மூத்த அதிகாரிகள் வந்தனர்.
அப்போது, தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், பாஜகவுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாவை விட பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி 16 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.