சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க 2,040 பறக்கும் படைகள்-தலைமை தேர்தல் அதிகாரி - மனோஜ்குமார் மீனா பேட்டி
தேர்தலில் முறைகேடுகளை தடுக்க 2,040 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கூறியுள்ளார்.
பெங்களூரு,
தேர்தலில் முறைகேடுகளை தடுக்க 2,040 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் ஆதிதிராவிடர் சமூகத்திற்கும், 15 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துள்ளோம். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், மரச்சாமான்கள், காத்திருப்போர் அறை, கழிவறை, தகவல் பலகை போன்ற வசதிகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
3.51 லட்சம் அலுவலர்கள்
இந்த தேர்தல் பணியில் மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 153 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் 69 ஆயிரத்து 938 தேர்தல் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த பணியில் நுண்ணிய பார்வையாளர்களாக 17 ஆயிரத்து 276 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நுண்ணிய பார்வையாளர்களுக்கு வருகிற 27-ந் தேதி பயிற்சி அளிக்க இருக்கிறோம். போலீஸ் அதிகாரிகள், செலவு கணக்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
பறக்கும் படைகள்
ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 709 மின்னணு ஓட்டு எந்திரங்களும், 82 ஆயிரத்து 543 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 89 ஆயிரத்து 379 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த எந்திரங்கள் தேவைக்கு அதிகமாக கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தற்போது 2 ஆயிரத்து 40 பறக்கும் படைகள், 2 ஆயிரத்து 605 மாநில கண்காணிப்பு குழுக்கள், 266 வீடியோ ஆய்வு குழுக்கள், 631 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 225 கணக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 942 சோதனை சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் மாநில எல்லையில் மட்டும் 172 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மனோஜ்குமார் மீனா கூறினார்.