சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 04.08.2024 முதல் 27.08.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Update: 2024-08-02 14:30 GMT

சென்னை:

2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

*விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை "www.tnhealth.tn.gov.in" என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*விண்ணப்பங்கள் இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்படமாட்டாது. மேலும், அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு "www.tnhealth.tn.gov.in" என்ற வலைதள முகவரியில் தெரிந்துக்கொள்ளலாம்.

*விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 04.08.2024 முதல் 27.08.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 27.08.2024 மாலை 05.30 மணி வரை.

*விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

*விண்ணப்பப்படிவங்கள் சமர்ப்பிக்கவேண்டிய முகவரி: "செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106."

*தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை மருத்துவம்) (NEET-UG) - 2024–ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.

*விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.

*கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.

*கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

*அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.சி., பி.சி. பி.சி.எம்., எம்.பி.சி./டி.என்.சி. பிரிவினர் 500 ரூபாய் விண்ணப்பக்கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ, மற்றும் எஸ்.டி. ஆகிய பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்), நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (அனைத்து பிரிவினர்) 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

*விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. (SBI) இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்.

*கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், தபால் / கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்