சாத் பூஜை 3-ம் நாள்.. இன்று அஸ்தமன சூரியனுக்கு பிரசாதம் படைக்க தயாராகும் பக்தர்கள்
சாத் பூஜையின் மூன்றாம் நாளான இன்று விரதம் இருப்பவர்கள் மாலையில் மறையும் சூரியனுக்கு பிரசாதம் படைத்து வழிபடுவார்கள்.
சூரியனைப் போற்றி வணங்கும் முக்கிய பண்டிகையான சாத் பூஜை நேற்று முன்தினம் நஹாய்-காய் சடங்குடன் தொடங்கியது. பீகார், உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வெகு விமரிசையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் காலையில் காசி, கங்கை மற்றும் கர்னாலி போன்ற புண்ணிய நதிகளில் பக்தர்கள் புனித நீராடினர், பின்னர் வீட்டிற்கும் புனித நீரை எடுத்துச் சென்றனர். அதை பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்கத் தொடங்கினர்.
பூஜையின் இரண்டாம் நாளான நேற்று கர்னா அல்லது லோகந்தா ஆகும். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய பகவானை வழிபட்டு விரதத்தை தொடங்கினர். நாள் முழுவதும் உணவு, நீர் எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்து, மாலையில் கீர், இனிப்பு சப்பாத்தி, வாழைப்பழம் போன்ற பாரம்பரிய பிரசாதத்தை சூரிய பகவானுக்கும், அவரது சகோதரியான சத்தி மையாவுக்கும் படைத்து வழிபட்டனர். பின்னர் பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். அதன்பின்னர் 36 மணி நேரம் உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் முழு உபவாசத்தை தொடங்கினர்.
சாத் பூஜையின் மூன்றாம் நாளான இன்று சந்தியா அர்க்யா எனப்படும் மாலை நேர படையல் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், இன்று பகலில் பூஜைக்கான பிரசாதம் தயாரிப்பார்கள். பின்னர் பிரசாதத்தை ஒரு மூங்கில் தட்டில் வைத்து, சூரிய பகவானுக்கு சமர்ப்பணம் செய்வார்கள்.
பிரசாதத்தில் தேக்குவா (ஒருவகை பிஸ்கட்), தேங்காய், வாழைப்பழம் மற்றும் பிற பருவகால பழங்கள் இடம்பெறும். பழ வகைகளில் தங்களால் முடிந்த பழங்களை பிரசாதத்தில் சேர்க்கலாம்.
சூரியனுக்கு படையல் செய்வதற்கான சடங்குகள் மாலையில் நதிக்கரை, குளக்கரை அல்லது சுத்தமான நீர்நிலையில் நடைபெறும். இந்த சடங்குகளை முறைப்படி செய்து, மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆகும்போது, தண்ணீருக்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்த பிரசாதத்தை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள்.
இதேபோல் நாளை காலை (8.11.2024) உதிக்கும் சூரியனையும் வழிபட்டு பிரசாதம் படைப்பார்கள். அதன்பின்னர் இஞ்சி அல்லது சர்க்கரை சாப்பிட்டு 36 மணி நேர விரதத்தை நிறைவு செய்வார்கள். இத்துடன் சாத் பூஜை நிறைவடைகிறது.
பல்வேறு இடங்களில் சாத் பூஜைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய பூஜை செய்வதற்காக புனித நதிகள், ஏரிகள், குளக்கரைகளில் உள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நீர்நிலைகள் இல்லாத இடங்களில் தற்காலிக நீர்நிலைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.