வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் மயங்கி விழுந்து சாவு

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 தொழிலாளிகள் மயங்கி விழுந்து இறந்தனர்.

Update: 2023-09-19 18:45 GMT

கட்டிட தொழிலாளி

பரமத்திவேலூர் தாலுகா, ராமதேவம் ஊராட்சிக்கு உட்பட்ட வாள்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 34) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கபிலர்மலை அருகே செஞ்சுடையாம்பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் நேற்று சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருஷ்ணகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நூல் மில் தொழிலாளி

வெப்படை அடுத்த வால்ராசபாளையத்தில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூல்மில்லில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (49) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் மில்லில் வேலுச்சாமி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள் அவரை காப்பாற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்