பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியமானது - சவுமியா

பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Update: 2023-04-16 01:30 GMT

தோல்வியைக் கண்டு துவளாமல், அதில் இருந்து கிடைத்த அனுபவத்தின் மூலம் புதிய பாதையில் பயணித்து, வெற்றிகரமான தொழில் முனைவோராக உருவாகி இருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சவுமியா. டிஜிட்டல் மார்க்கெட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

"2019-ம் ஆண்டு நானும், எனது நண்பரும் இணைந்து 'ஈவெண்ட் பிளானிங்' நிறுவனத்தை ஆரம்பித்தோம். அந்த துறை சார்ந்த அடிப்படை விஷயங்கள் எதுவுமே தெரியாமல் தொடங்கியதால், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

நஷ்டம் ஏற்பட்டு, கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்தது. நிறுவனத்தைத் தொடங்கிய 6 மாதத்திற்குள்ளாகவே, அதனை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கல்லூரி படிக்கும்போது எனது பேராசிரியை பூங்கொடி, மார்க்கெட்டிங் பற்றி பல்வேறு கோணத்தில் கற்றுக்கொடுத்தது நினைவுக்கு வரவே மார்க்கெட்டிங் துறையை தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன். எனது பொருளாதார நிலைமையை சீர்படுத்துவதற்காக, தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன். அங்கு மார்க்கெட்டிங் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டேன். 'அதைப்பற்றி ஏன் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கக் கூடாது?' என்ற எண்ணம் ஏற்பட்டது. அதையே தொழிலாகத் தொடங்கும் ஆர்வம் அதிகரித்தது.

பின்னர் பேராசிரியர் ஒருவர் மூலமாக, மத்திய அரசு நடத்தும் 'எம்.எஸ்.எம்.இ' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அங்கு சேர்ந்து முழுமையான பயிற்சி பெற்றேன்.

உங்களின் முதல் தோல்வியில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

எனக்கு முன்பெல்லாம் சுய சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மை அதிகமாக இருந்தது. எதை செய்தாலும் மற்றவர்களின் துணையை எதிர்பார்த்தேன். ஆனால், எனது முதல் தோல்விக்கு பிறகு தன்னம்பிக்கை அதிகரித்தது. முதல் நிறுவனத்தை தொடங்கியபோது செய்த தவறுகள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொண்டேன்.

முன்பெல்லாம் மற்றவர்கள் என்னைப் பற்றி ஏதாவது விமர்சித்தால் உடனே எனக்கு கோபம் வரும். முதல் தோல்விக்குப் பிறகுதான், சமூகம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், ஒரு பெண் சுயமாக நிறுவனத்தை தொடங்கினாலும் சிலர் எதிர்மறையாக பேசத்தான் செய்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். இப்பொழுது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் எனக்கு வந்துவிட்டது.

அடுத்து, லாப நோக்கில் மட்டும் ஒரு நிறுவனத்தை நடத்தக் கூடாது என்பதை புரிந்து கொண்டேன். நம்மால் முடிந்ததை நம் நிறுவனத்தின் வாயிலாக சமூகத்திற்கு செய்யும்போது, அது வேறொரு வடிவில் நமக்கு நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

நிறுவனம் தொடங்க விரும்பும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை...

இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தருகிறது. உதாரணமாக தமிழக அரசு அளிக்கும் 'ஸ்டார்ட் அப் டி.என்' என்ற திட்டம் மிகவும் உபயோகரமாக உள்ளது. அதனை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்களது யோசனைகளை முன் வைத்தால் மட்டுமே போதுமானது. நல்ல யோசனைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு நிதி உதவி வழங்கி வருகின்றனர். கடனாக அல்லாமல் உதவியாகவே வழங்குகின்றனர்.

  அதுமட்டுமின்றி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்ட்ரப்ரனர்ஷிப்' என்ற வகுப்பை உருவாக்கி தொழில் தொடங்கும் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கற்று தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்ததும் ேவலைக்கு செல்லாமல் நிறுவனம் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு மாறுகின்றனர். நானும் அத்தகைய வகுப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றேன். எனவே தொழில் தொடங்க விரும்பு பவர்கள் நல்ல யோசனைகளை மட்டும் முன்வைத்து இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

உங்களைப் போல நிறுவனம் தொடங்குபவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

முதலாவது, நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பணிக்கு நிறைய ஆட்களை சேர்க்கக்கூடாது. உங்களால் எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்து குறைவான ஆட்களை சேர்த்தால் போதுமானது.

இரண்டாவது ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். குறைவான சம்பளம் கொடுத்தால் அவர்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டு, மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்ற சென்று விடுவார்கள். இதனால் நாம் மீண்டும் பணத்தை செலவழித்து ஆட்கள் சேர்க்கும் நிலை ஏற்படும்.

நிதியை நிர்வகிக்க, கணக்கு வழக்குகளை பார்க்க ஆட்களை பணியில் அமர்த்தியிருந்தாலும், ஒரு நிறுவனராக நாமும் அதனை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

தொழிலைத் தவிர, சமூக முன்னேற்றத்திற்கான உங்களின் பங்களிப்பு என்ன?

எங்கள் நிறுவனத்தின் மூலமாக அரசுப் பள்ளிகளில் சத்துணவுக்கான காய்கறி தோட்டத்தை அமைக்க உதவி வருகிறோம். அதன் மூலம் கிடைக்கும் காய்கறி களைக் கொண்டு மாணவர்களின் சத்துணவு தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். மேலும் வீதிகளில் ஆதரவற்று திரியும் நாய்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகிறோம்.

பெண்கள் தொழில் தொடங்குவதற்கு உங்களின் ஆலோசனை என்ன?

பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்களிடம் திறமையும், நிதி மேலாண்மையும் இருந்தாலே போதும். நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

உங்கள் எதிர்கால இலக்கு என்ன?

தெரு நாய்களின் நலனுக்காக, இன்னும் அதிகமாக உதவ வேண்டும் என்பது எனது விருப்பம். எதிர்காலத்தில் அவற்றுக்கு தேவையான மருத்துவ மற்றும் இதர உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்