அமெரிக்காவில் ஒலிக்கும் 'திருக்குறள்'

ஊரில் இருந்து எங்கள் பாட்டி வரும்போது, தமிழில் பல கதைகள் சொல்வதுண்டு. அதன் மூலம் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது.

Update: 2022-06-06 05:30 GMT

ங்கிலத்தில் சரளமாக பேசுவதை கவுரவமாக நினைக்கும் பலருக்கு மத்தியில், தமிழ் மொழியின் மீது பெற்றோர் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, 3 வயதிலேயே திருக்குறள் கற்க ஆரம்பித்தார் ரக்சிகா. தற்போது 12 வயதாகும் இவர், 1,330 குறளையும் முழுமையாக மனப்பாடம் செய்து, விளக்கத்துடன் ஒப்புவித்து வியப்பூட்டுகிறார்.

சுற்றிலும் ஆங்கிலத்தின் வாசம் சூழ்ந்திருக்கும் அமெரிக்க நாட்டில் பிறந்து அங்கேயே வசிக்கும் ரக்சிகா, பேசும் தமிழில் ஆங்கிலம் கலந்திருக்காது என்பதே வியப்புக்குரியது.

தமிழ்நாடுதான் இவரது பூர்வீகம். அப்பா சுதாகர், சேலம் சாத்தூரைச் சேர்ந்தவர். அம்மா அபிராமி தூத்துக்குடியைச் சேர்ந்தவர். பணியின் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறினர். ரக்சிகாவுக்கு ஒரு சகோதரி இருக்கிறார். ரக்சிகாவுடன் நடந்த உரையாடல் இங்கே...

தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

அமெரிக்காவில், தற்போது 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். இங்கு, படிப்பது, வெளியிடங்களில் பேசுவது என அனைத்தும் ஆங்கிலம். எனவே 'வீட்டிற்குள் ஆங்கிலம் வேண்டாம்' என்று நாங்கள் முடிவு செய்தோம். அதனால், வீட்டில் எப்போதும் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழில்தான் பேசுவோம். இதைச் சிறுவயதில் இருந்தே பின்பற்றி வருகிறோம். ஊரில் இருந்து எங்கள் பாட்டி வரும்போது, தமிழில் பல கதைகள் சொல்வதுண்டு. அதன் மூலம் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது.

திருக்குறள் கற்கத் தூண்டியது எது?

தமிழைப் பேசுவதுடன், அதைப் படித்துப் பழக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது, பாட்டி கொண்டு வந்த தமிழ் புத்தகங்கள், தமிழ் நாளிதழ்கள் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கத் தொடங்கினேன். சிறுவயதில், பெற்றோர் எளிமையாக இருக்கும் திருக்குறளை எனக்கு சொல்லிக் கொடுத்தனர். கலிபோர்னியாவில், 'பே ஏரியா குறள் கூடம்' என்ற அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்கும். இதில், ஏற்பட்ட ஆர்வம்தான் திருக்குறளைக் கற்கத் தூண்டியது.

எத்தனை மணி நேரத்தில் குறளை ஒப்புவிக்க முடியும்?

குறளை வரிசையாக பொருளுடன் சொல்ல வேண்டுமானால், 4 மணி நேரம் 30 நிமிடத்தில் சொல்லி முடிக்க முடியும். குறளின் வரிசை எண், முதல் அல்லது இறுதி வார்த்தை என எதைக் கூறினாலும் அதற்கான குறளை, பொருளுடன் கூற முடியும்.

நீங்கள் வாங்கிய பரிசுகள் பற்றி சொல்லுங்கள்?

கனடா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான தமிழ்ச் சங்கம் மண்டல வாரியாக நடத்திய குறள் போட்டியில், 7-வது மண்டலத்தில் முதல் பரிசும், ஒட்டு மொத்த போட்டியில் 2-ம் இடமும் கிடைத்தது. பே ஏரியா குறள் சங்கம் சார்பில் நடந்த போட்டியில், அனைத்து குறளையும் விளக்கத்துடன் ஒப்புவித்ததால், முதல் பரிசு கிடைத்தது. மேலும், 'குறள் இளவரசி' என்ற பட்டமும் கிடைத்தது.

எதிர்கால இலக்கு என்ன?

தமிழ் மீதான எனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டு, சக மாணவர்களிடமும் அதன் சிறப்பைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளேன். 

Tags:    

மேலும் செய்திகள்