சிந்தித்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமே - திவ்யா

பங்குச் சந்தை என்பது கடல் போன்றது. அதில் லாபம் ஈட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு அணுகுமுறையைப் பயன்படுத்துவார்கள். அதில் நான் கற்றுக்கொண்ட மற்றும் லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்துகின்ற நுணுக்கங்களை மட்டுமே மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

Update: 2023-04-02 01:30 GMT

நிறுவனங்கள், தங்கள் தொழில் முதலீட்டுக்கான பணத்தை அதிகரிப்பதற்கு உதவும் முக்கியமான வழிகளில் ஒன்று 'பங்குச் சந்தை'. இதன்மூலம் தொழிலை பொதுவெளியில் சந்தைப்படுத்தி, அதன் உரிமைத்துவ பங்குகளை விற்று, முதலீட்டுக்கான தொகையை பெற முடியும். இந்த பங்குகளை சரியான நேரத்தில் வாங்குவதும், விற்பதும், முதலீட்டாளர்களுக்கு லாபம் தரக்கூடிய வழியாகும். இத்தகைய வர்த்தகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தேனி மாவட்டம், ஸ்ரீரங்கபுரம் பகுதியைச் சேர்ந்த திவ்யா.

''பங்குச் சந்தையில் லாபகரமாக முதலீடு செய்வதைக் கற்றுக் கொள்வது, குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு வீட்டில் இருந்தே பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கான நல்ல வழி" என்கிறார் திவ்யா. பங்குச் சந்தை முதலீடுகளுக்கான ஆலோசனைகளுக்கு, தேசிய அளவிலான சான்றிதழ் பெற்று செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து மற்றவர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறார். தனது வர்த்தகத்தின் மூலம் வரும் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை, நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து வரும் அமைப்புக்கு வழங்கி வருகிறார். இத்தகைய சமூகப் பணியைப் பாராட்டும் வகையில், இவருக்கு 'சேஞ்ச் மேக்கர்' என்ற விருது கிடைத்துள்ளது. அவருடன் உரையாடியதிலிருந்து...

"எனது தந்தை புகழேந்தி காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் ரமணி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. நான் பொறியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். என்னுடைய கணவர் கார்த்திக் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மகள் ஆர்ணா முதல் வகுப்பு படிக்கிறார்.

நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மட்டுமில்லாமல், அதுபற்றி மற்றவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறேன். ஓவியம் தீட்டுவது, கைவினைப் பொருட்கள் மற்றும் பேஷன் நகைகள் தயாரிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. ஓய்வு நேரங்களில் அவற்றை செய்து வருகிறேன்."

பங்குச் சந்தையில் ஆர்வம் வந்தது எப்படி?

திருமணத்துக்குப் பிறகு கணவரோடு பெங்களூருவில் தங்கி பணிக்கு சென்று கொண்டிருந்தேன். குழந்தை பிறந்ததும், பேறுகால விடுப்பு முடிந்து பணியில் சேர வேண்டிய நேரம் வந்தபோது, குழந்தையைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால் பணியில் இருந்து விலகி, குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருந்தேன்.

ஏற்கனவே நான் வணிக மேலாண்மை படித்திருந்ததால், பங்குச் சந்தை பற்றிய அடிப்படை புரிதல் இருந்தது. அதனால் குழந்தையை கவனித்துக் கொண்டே பங்குச் சந்தை தொழிலை செய்யலாமே என்ற எண்ணத்தில் அதற்கான குறுகியகால பாடத்திட்டங்களை படித்து முடித்தேன். எனது கணவரின் ஆதரவுடன் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். இவ்வாறு எனது சுய முயற்சியால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகு, தேசிய பங்குச் சந்தை நிறுவனத்தில் சில பாடத்திட்டங்களை முடித்தேன். இதற்கிடையில் சில பங்குச் சந்தை முதலீடுகளையும் தொடர்ந்து செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், பணிக்குச் சென்று சம்பாதிப்பதை காட்டிலும் பங்குச் சந்தை வர்த்தகத்திலேயே போதுமான வருமானம் வரத் தொடங்கியது. எனவே அதை முழு நேரமாக செய்யத் தொடங்கினேன்.

பங்குச் சந்தை பற்றி வகுப்பு எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று நோய் பரவியதால், என் கணவருக்கு அலுவலகத்தில் 'ஒர்க் பிரம் ஹோம்' முறையில் பணிகள் வழங்கப்பட்டது. ஆகையால் நாங்கள் பெங்களூருவில் இருந்து தேனிக்கு குடி பெயர்ந்தோம். அந்த சமயத்தில் எங்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அதன்படி நான் கூறிய ஆலோசனையை கேட்டு முதலீடு செய்து லாபம் அடைந்ததால் பங்குச் சந்தையைப் பற்றி கற்றுக்கொள்ள மேலும் ஆர்வம் காட்டினார்கள்.

இவ்வாறு நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். அவர்கள், தாங்கள் ஈட்டிய லாபத்தை 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து எனக்கு அனுப்பினார்கள். அதைப் பார்த்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் அதில் எனக்கு கிடைத்த நம்பிக்கையைப் பார்த்த என் கணவர், "இதை நீ நிறைய பேருக்கு கற்றுக் கொடுக்கலாமே" என்று ஊக்கப்படுத்தினார். அவ்வாறு தான் பங்குச் சந்தை பற்றிய வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்.

பங்குச் சந்தை பற்றி பயிற்சி பெறுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

பங்குச் சந்தை என்பது கடல் போன்றது. அதில் லாபம் ஈட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு அணுகுமுறையைப் பயன்படுத்துவார்கள். அதில் நான் கற்றுக்கொண்ட மற்றும் லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்துகின்ற நுணுக்கங்களை மட்டுமே மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அதை மூன்று வாரங்களுக்குள் கற்றுக்கொள்ள முடியும்.

பங்குச் சந்தை முதலீடுகள் பற்றி அறிந்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

மற்ற முதலீடுகளைக் காட்டிலும், பங்குச் சந்தையில் முதலீட்டின் மீதான வருவாய் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம். வீட்டில் இருந்துகொண்டே பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டபடி, குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளலாம்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல முடியவில்லை என்று வருந்தும் பெண்களுக்கு, இது ஏற்றதாக இருக்கும். பங்குச் சந்தையைப் பற்றி முறையாக கற்றுக்கொண்டு அதில் ஈடுபட்டால் சிறப்பாக செயல்பட முடியும். சிந்தித்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமே.

பங்குச் சந்தை முதலீடு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. அதை லாபகரமாக செய்வது எப்படி?

பங்குச் சந்தையில் மூன்று விதமாக பணம் ஈட்ட முடியும். முதலாவது தின வர்த்தகம். இரண்டாவது குறுகிய கால முதலீடு. மூன்றாவது நீண்ட கால முதலீடு.

இதில் தின வர்த்தகம் செய்வதற்கு, தீவிரப் பயிற்சியும், முன் அனுபவமும் தேவை. மற்ற இரண்டிற்கும் ஓரளவிற்கு அதைப் பற்றிய விவரங்கள் தெரிந்திருந்தால் போதும்.

தினசரி நாம் செய்யும் வேலைகளை எவ்வாறு கற்றுத் தேர்ந்து பயமில்லாமல் செய்கிறோமோ, அதேபோல் லாபகரமாக பங்குச் சந்தையிலும் சாதிக்க முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்