அன்னம் அளித்த ஆசிரியை

சுமார் 6 மாதங்கள் 60 குழந்தைகளுக்கு தானே உணவு சமைத்து பசியாற்றினார். எனினும் இதை வாரம் ஒருநாள் மட்டுமே அவரால் வழங்க முடிந்தது. இது தொடர வேண்டுமென்றால் நன்கொடையாளர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்த தருணம் அது.

Update: 2022-06-06 05:30 GMT

"நான் பாடம் கற்பிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும், பட்டாசு ஆலைகளில் பணியாற்றுவோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள். அவர்கள் காலையிலேயே வேலைக்குச் சென்றால்தான் வாழ்வை நகர்த்த இயலும். இதனால் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைப்பது அரிது. வகுப்பில் பாடம் படித்துக் கொண்டிருக்கும்போதே குழந்தைகளின் முகங்கள் மெல்ல மாறத் தொடங்கும்.

12 மணி நெருங்கிவிட்டால் ஓரத்தில் அடுக்கி வைத்திருக்கும் சாப்பாட்டுத் தட்டுக்களை நோக்கி அவர்களின் கண்கள் தடுமாறும். பசியால் இக்குழந்தைகள் படும்பாட்டை நேருக்கு நேராய் கண்டு வருந்தி நின்றேன்" என்று சொல்லும்போதே ஆசிரியை ஜெயமேரியின் குரலில் வருத்தம் தெரிகிறது. சிவகாசி அருகே உள்ள க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் இவர், தாயில்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பசியால் தவிக்கும் குழந்தைகளின் நிலையை மாற்றும்பொருட்டு, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 'காலை இணை உணவுத்திட்டம்' என்ற பெயரில் ராகி லட்டு போன்ற தின்பண்டங்கள் கொடுத்து தற்காலிகமாக பசியை போக்கினார் ஜெயமேரி. எனினும் அதை வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தன் சொந்த செலவில் செய்ய முடிந்தது. பின்பு முகநூல் நட்பு மூலம் ரெயில் கரங்கள் என்ற அமைப்பினர் உதவியால், காலை உணவு நாள்தோறும் வழங்கப்பட்டது. காலையில் உணவு சாப்பிட்டதும் குழந்தைகள் அடைந்த மகிழ்வை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது என்கிறார் ஜெயமேரி.

இதனிடையே 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் ஆரம்பித்தபிறகு இந்தப் பணியில் சிறு தொய்வு ஏற்பட்டது. அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் ஒருபக்கம் சிக்கலாக, பெற்றோர்களின் வேலை இழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதை சமாளிக்க நேரடியாக களம் இறங்கினார் ஜெயமேரி.

சுமார் 6 மாதங்கள் 60 குழந்தைகளுக்கு தானே உணவு சமைத்து பசியாற்றினார். எனினும் இதை வாரம் ஒருநாள் மட்டுமே அவரால் வழங்க முடிந்தது. இது தொடர வேண்டுமென்றால் நன்கொடையாளர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்த தருணம் அது.

அப்போது முகநூல் நண்பர்களின் உதவி அவருக்கு கை கொடுத்தது. பிறந்தநாள், திருமணநாள் என்று பலரும் ஜெயமேரி வழியாக பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளிக்க உதவினார்கள். இவ்வாறு கொேரானா காலகட்டத்தில் சுமார் 2 ஆண்டுகள், 3 வேளை உணவு வழங்கும் அளவுக்கு அவர் சேவைக்கு உத்வேகம் கிடைத்தது.

உணவு அளிப்பதில் திருப்தி ஏற்பட்ட அதே நேரத்தில் அவர்களின் படிப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார் ஜெயமேரி. மடத்துப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் பராமரிப்பின்றி இருந்தது. அதனை சிவகாசி முகநூல் நண்பர்களின் துணை கொண்டு வண்ணம் அடித்து திண்ணைப் பள்ளி அமைத்தார். அதில் 60 பேர் பயின்றனர். தவறாது தானே பாடங்களை நடத்தினார்.

''மடத்துப்பட்டியில் இந்த ஏற்பாடுகள் செய்தாலும், நான் இருக்கக்கூடிய தாயில்பட்டி கிராமத்துக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று மனம் வாடியது. வெவ்வேறு அரசுப்பள்ளிகளில் 1 முதல் 10 வரை படிக்கும் குழந்தைகள் 60 பேருக்கு பாடம் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தேன்.

என் வீட்டில் கணவர் எலக்ட்ரிக் பொருள்கள் வைத்திருந்த அறையை காலி செய்து அதில் 'அருகாமைப்பள்ளி' என்ற பெயரில் பாடம் நடத்தத் தொடங்கினேன். அவர்களுக்கும் வாரத்தில் இரண்டு நாள்கள் உணவு வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது'' என்கிறார் ஜெயமேரி.

இந்த அறப்பணியில் பல நெகிழ்வான சம்பவங்களை சந்தித்துள்ளார் ஜெயமேரி. ஒருநாள் வழக்கம்போல் மடத்துப்பட்டிக்கு உணவளிக்க சென்றபோது குழந்தைகளில் சிலர், அவரின் கண்களை துணியால் கட்டிக்கொண்டு அழைத்துச்சென்றனர். குழந்தைகளின் திடீர் செய்கை ஜெயமேரிக்கு திகைப்பூட்டியது. ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்ற பிறகு கண்களை அவிழ்த்தபோது குழந்தைகளுடன் அவருடைய பெற்றோர்களும் கூடி நின்று கைதட்டினர். அவரது கைகளில் ஒரு தட்டில் வைக்கப்பட்ட புடவை, பூ மற்றும் பழங்கள் தரப்பட்டன.

'என்ன சொல்வது' என்று தெரியாமல் திகைத்தார் ஆசிரியை ஜெயமேரி. "இது எங்களின் அன்பளிப்பல்ல. இந்தக் குழந்தைகள் நாங்கள் கொடுக்கும் 1 ரூபாய், 2 ரூபாய்களை சேர்த்து வைத்து உங்களுக்கு கொடுத்துள்ளார்கள்" என்று பெற்றோர்கள் சொன்னபோது, ஜெயமேரிக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது. "பல்வேறு அமைப்புகள் எனக்கு விருதுகள் கொடுத்தாலும், குழந்தைகள் கொடுத்த புடவைதான் எனக்கு கிடைத்த மாபெரும் பரிசு" என்கிறார்.

"குழந்தைகளுக்கு ஒரு மடங்கு அன்பு காட்டினால், பன்மடங்கு அவர்கள் திருப்பி தருவார்கள்" என்று கூறுகிறார் ஜெயமேரி.

கொேரானா உச்சத்தில் இருந்தபோது எங்கள் உறவுகளில் சிலர், என் கணவரிடம் முறையிட்டனர். "இத்தகைய ஆபத்தான காலகட்டத்தில் வெளியே போக வேண்டுமா? இதுவெல்லாம் மேரிக்கு தேவையா?" என்று அவர்கள் கேட்க, "இந்தப் பணியை நிறுத்த முடியாது. இது மிகவும் தேவையானது.

எங்கள் அனைவரின் சம்மதத்துடன்தான் செய்து வருகிறார்" என்று பதில் கொடுத்து, என்னையும் உற்சாகப்படுத்தினார் என் கணவர். தனது உடல் உபாதைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூழலிலும், நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்கான உணவை அனுப்பிவைத்தவர் ஜெயமேரி.

தற்போது தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை தொடங்குவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜெயமேரியை, அப்பகுதி மக்கள் 'அம்மா' என்று அன்போடு அழைக்கிறார்கள். காரணம் கடினமான காலகட்டங்களில் அப்பகுதி மக்களோடு மக்களாக நின்றிருக்கிறார் ஜெயமேரி.

நன்கொடையாளர்கள் கிடைக்காத காலகட்டங்களில் மேரியின் குடும்பத்தினரே அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர். மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கும் கணவர் கருப்பசாமி, ஒரு மகன், 2 மகள்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்