இசையால் வாழ்க்கை இனிமையாகும் - தீபிகா

பெண்கள் மட்டுமே பங்குபெறும் இசைக் குழுவை உருவாக்கினோம். பெண்கள் இசையமைப்பாளர்களாக ஆவது குறைவு. அதனால், இசை உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான முதல் படியாகவே இந்தக் குழுவைத் தொடங்கினோம்.;

Update:2022-08-14 07:00 IST

"இசையின் மூலமாக சக மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்கிறார் தீபிகா தியாகராஜன். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னையில் வசித்து வருகிறார். இசைக் குடும்பத்தின் கலை வாரிசாக பிறந்த தீபிகா, அந்தப் புகழ் வெளிச்சத்தின் பிரதிபலிப்பாக இருக்காமல், தனக்கென பாதை அமைத்து, தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகியாக இருக்கும் இவர், பெண்களுக்கான பிரத்தியேக இசைக்குழு ஒன்றை நடத்தி வருகிறார். உளவியல் ரீதியாக இசையால் மனநலனை மேம்படுத்தும் பணியையும் செய்து வருகிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…

"எனது தந்தை டி.எல். தியாகராஜன் திரைப்பட பின்னணிப் பாடகர். தாய் லதா பரதநாட்டியம் மற்றும் ஓவியக் கலைஞர். தமிழ் திரை உலகின் முதல் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் எனது தாத்தா. பின்னணிப் பாடகர்கள் டி.எல். மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் எங்கள் குடும்ப உறவுகள். இவ்வாறு இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், இயற்கையாகவே எனக்கு இசையின் மீது அதிக ஆர்வம் இருந்தது.

இசையில் முதுகலைப் பட்டத்தையும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றுள்ள நான், தற்போது அதில் முனைவர் பட்டத்தை பெறுவதற்காக ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருக்கிறேன். இதுமட்டுமில்லாமல் உளவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றிருக்கிறேன்.

எனது கணவர் வினய் நாயர் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இருவரும் சேர்ந்து உளவியல் ஆலோசனை மற்றும் வாழ்க்கைப் பயிற்சிக்கான ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறோம்.

இசையை யாரிடமிருந்து கற்றீர்கள்?

எனது தாய்வழிப் பாட்டி சரோஜா ஸ்ரீநிவாசனிடம் தான் முதன் முதலில் சங்கீதம் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, ஸ்ரீமுஷ்ணம் ராஜா ராவ், பத்மா சாண்டில்யன், லட்சுமி ராகவன், வசந்த் பீட்டர், எபினேசர், மோகன் சந்தானம் போன்றவர்களிடம் கற்றேன். தற்போது கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி இசை கற்று வருகிறேன்.

இசைத் துறையில் உங்கள் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்?

லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் பியானோ இசைப்பதில் ஐந்து கிரேடுகளையும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 'அசோசியேட்டட் போர்டு ஆப் தி ராயல் ஸ்கூல்ஸ் ஆப் மியூசிக்' என்ற தேர்வு வாரியத்தின் மூலம் வெஸ்டர்ன் கிளாசிக்கல் வாய்ப்பாட்டில் ஐந்து கிரேடுகளையும் முடித்திருக்கிறேன். பாடுவதும், பியானோ மற்றும் கிடார் வாசிப்பதும் எனக்குப் பிடித்தமான விஷயங்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியிருக்கிறேன். தனிப்பாடல்கள், விளம்பரப் பாடல்கள், நெடுந்தொடர்களுக்கான தொடக்கப் பாடல்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை பாடியிருக்கிறேன். திரைப்படப் பின்னணிப் பாடகியாக, பிரபல இசையமைப்பாளர்கள் பலருடன் பணியாற்றி இருக்கிறேன். சொந்தமாகப் பாடல்களை எழுதி இசையமைத்து, எனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறேன். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறேன்.

உளவியலில் ஈடுபாடு வந்தது எப்படி?

ஆய்வியல் நிறைஞர் பட்டத்தைப் பெறுவதற்காக 'மியூசிக் தெரபி' என்ற தலைப்பை தேர்வு செய்திருந்தேன். அப்போதுதான், மனிதர்களின் மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் கருவியாக இசையை பயன்படுத்தி, அவர்கள் மனநலனை மேம்படுத்துவதை ஒரு சேவையாக செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால், உளவியல் படித்தேன்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்து வது தொடர்பாக, சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பங்கேற்றேன். இதில் 'மியூசிக் தெரபி' எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களின் மனநிலையையும் இசையால் மேம்படுத்துவது தொடர்பான பல பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றிருக்கிறேன்.

பெண்கள் மட்டுமே பங்குபெறும் இசைக் குழுவைத் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?

எங்கள் குழுவில் உள்ள டிரம்ஸ் கலைஞர் ரினய் பிரசாத் மற்றும் பியானோ கலைஞரான எனது தோழி ஸ்டெர்லின் நித்யா ஆகியோருடன் சேர்ந்து, பெண்கள் மட்டுமே பங்குபெறும் இசைக் குழுவை உருவாக்கினோம். பெண்கள் இசையமைப்பாளர்களாக ஆவது குறைவு. அதனால், இசை உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான முதல் படியாகவே இந்தக் குழுவைத் தொடங்கினோம்.

இதன் மூலம் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று ஐந்து மொழிகளில் பாடல்களைப் பாடுகிறோம். அதனால் எங்கள் குழுவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கிறது.

இசையை கற்க விரும்பும், வசதி குறைந்த பெண் குழந்தைகளுக்கு வகுப்புகளை எடுக்கும் திட்டம் உள்ளதா?

இசை என்பது பெருங்கடல். அதில் நான் கற்றுக்கொண்டது எள் அளவுதான். அதை யாருக்குக்கற்றுக்கொடுத்தாலும் இசை ஞானம் கூடுமே தவிர குறையாது. எனவே, பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் இசையை கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனியும் அதைத் தொடர்ந்து செய்வேன்.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் மற்றும் கவுரவங்கள் என்ன?

இசையில் சிறந்து விளங்குவதற்காக 'அறிவுக் கதிர்' என்ற பட்டம் பெற்றிருக்கிறேன். 'அசோசியேட்டட் போர்டு ஆப் தி ராயல் ஸ்கூல்ஸ் ஆப் மியூசிக்' வாரிய தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றதால் கவுரவிக்கப்பட்டேன். உளவியல் படிக்கும்போது கற்றல் சார்ந்து நான்கு விருதுகளை பெற்றிருக்

கிறேன். பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற இசைப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கிறேன். சிறந்த பாடகி என்ற விருதைப் பெற்றிருக்கிறேன்.

எதிர்காலத்தில் இசைத்துறையில் நீங்கள் செய்ய நினைப்பது என்ன?

நிறைய பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும். நான் எழுதி இசையமைத்த பாடல்களைத் தொகுத்து வெளியிட வேண்டும். 'மியூசிக் தெரபி' மூலம், எனது இசையால் ஒரு சிலரின் வாழ்விலாவது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதைவிட எனக்கு மகிழ்ச்சியைத் தருவது வேறு எதுவும் இருக்காது. 

Tags:    

மேலும் செய்திகள்