3டி கலை உருவங்களை படைக்கும் மோனாமி

ஒவ்வொரு சிற்பத்திற்கும் அதற்கு ஏற்றவாறு வடிவம் கொடுப்பதால், பார்ப்பதற்கு அசல் போலவே காட்சியளிக்கின்றன இவர் செய்யும் அட்டைப் பெட்டி சிற்பங்கள். கண்களைக் கவரும் இந்த சிற்பங்களை செய்ய அவர் பயன்படுத்திய பொருட்கள் பழைய அட்டைப் பெட்டி, கத்தரிக்கோல், பசை, டேப், அளவு கோல் ஆகியவை மட்டுமே.

Update: 2022-07-17 01:30 GMT

சிற்பங்கள் செதுக்குவது நுட்பமான கலை. களிமண், மரம், உலோகங்கள், மண், சாக்பீஸ் துண்டுகள் என பலவற்றையும் அழகிய சிற்பங்களாக மாற்றுவதை அறிந்திருப்போம். அந்த வரிசையில், தேவையில்லை என்று தூக்கி எறியும் அட்டைப் பெட்டியில் கூட முப்பரிமாண சிற்பங்களை செய்து அசத்தி வருகிறார், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மோனாமி.

ஜப்பானில் உள்ள வகயாமா என்ற ஊரில் பிறந்த மோனாமி, ஒசக்காவில் உள்ள கலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தனது கல்லூரியில் கொடுத்த புராெஜக்டை செய்வதற்கு அவருக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கவலையுடன் வீட்டிற்கு திரும்பிய மோனாமி, வீட்டில் பழைய அட்டைப் பெட்டிகள் நிறைய இருப்பதைக் கண்டார்.

உடனே அவரது மனதில் ஒரு யோசனை தோன்றியது. அதன்படி அவற்றை ெகாண்டு சிற்பங்கள் செய்து, அதில் கிடைத்த வருமானத்தில் தனது கல்லூரி புராஜெக்டை முடித்தார்.

அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்தி நுணுக்கமான வேலை கொண்ட கைக்கடிகாரங்கள், பள்ளி உடைகள், கார்ட்டூன் உருவங்கள், இசைக்கருவிகள், டிராகன், பர்கர் போன்ற உணவு பொருட்கள், ரோபோட், காலணிகள், மினியேச்சர் வாகனங்கள் என்று அவர் செய்யாத சிற்பங்களே இல்லை. "எளிமையான வேலை போல தோன்றினாலும், ஒரு உருவத்தை செய்வதற்கு பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, உன்னிப்பாக செயல்பட வேண்டும்" என்று கூறுகிறார், மோனாமி.

ஒவ்வொரு சிற்பத்திற்கும் அதற்கு ஏற்றவாறு வடிவம் கொடுப்பதால், பார்ப்பதற்கு அசல் போலவே காட்சியளிக்கின்றன இவர் செய்யும் அட்டைப் பெட்டி சிற்பங்கள். கண்களைக் கவரும் இந்த சிற்பங்களை செய்ய அவர் பயன்படுத்திய பொருட்கள் பழைய அட்டைப் பெட்டி, கத்தரிக்கோல், பசை, டேப், அளவு கோல் ஆகியவை மட்டுமே.

மோனாமி, தான் வடிவமைத்த சிற்பங்களை தனக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் விற்பனை செய்வதோடு, அவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தும் வருகிறார். ''அட்டைப் பெட்டிகளைக் கொண்டு சிற்பங்களை செய்யும் பொழுது, எனக்குள்ளே ஒளிந்திருந்த சிற்பக் கலைஞரை உணர்ந்தேன். இந்த வேலையை என்னால் நிறுத்தவே முடியவில்லை'' என்று கூறுகிறார், மோனாமி.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க ஆரம்பித்த வேலை, அவருக்குள் இருந்த தனித்தன்மையை வெளிக்கொண்டு வந்து சிற்பக் கலைஞராக மாற்றி இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்