இசையால் இதயம் தொடும் மஹன்யா ஸ்ரீ
கர்நாடக சங்கீதம், பக்தி இசை போன்ற இசையின் பல பரிமாணங்களை முறைப்படி தொடர்ந்து கற்று, மக்களுக்கு தெய்வீக அனுபவத்தையும், ஆனந்தத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.;
"இசையின் மூலம் அனைவருடைய மனதிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை" என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த மஹன்யா ஸ்ரீ. தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இவர், இதுவரை 100-க்கும் மேற்பட்ட பக்தி மற்றும் கர்நாடக இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். இசைக்காக தென்னிந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். மத்திய அரசின் கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஊக்கத்தொகைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.தனிப்பட்ட முறையில் பல்வேறு இசை ஆல்பங்களையும் மஹன்யா ஸ்ரீ வெளியிட்டிருக்கிறார். இவருடன் ஒரு உரையாடல்.
"எனது பெற்றோர் சிவராமன்-ஜெயப்ரியா. எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். அவரும் இசைத்துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகிறார். நான் நன்றாகப் பாடுவேன். ஓவியத்திலும், நடனத்திலும் எனக்கு ஈடுபாடு உண்டு. தற்போது இசையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். இருந்தபோதும் பள்ளிப் பாடங்களையும் தவறாமல் படித்து விடுவேன். கணக்குப்பதிவியல் பாடத்தில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு.
இசையின் மீது நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்?
சிறு வயதில் இருந்தே எனக்கு இசையின் மீது ஆர்வம் இருந்தது. நான் குழந்தையாக இருந்தபோது என்னை தூங்க வைப்பதற்காக தாலாட்டுப் பாடுவார்கள். அப்போது, நீண்ட நேரம் தூங்காமல் அதைக் கேட்பேன் என்று என்னுடைய அம்மா கூறுவார். நான் தூங்கிக் கொண்டிருந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில், குறிப்பிட்ட பாடகர்கள் பாடும்போது எழுந்து வந்து அதைப் பார்ப்பேன் என்று எனது பாட்டி அடிக்கடி கூறுவார்.
நான் மழலையர் பள்ளியில் படித்தபோது, ரைம்ஸ்களை நன்றாக ராகத்துடன் பாடுவதைக் கவனித்த எனது வகுப்பாசிரியை, "இவளுக்கு இசையில் ஆர்வம் உள்ளது. இசை வகுப்பில் சேர்த்துவிடுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதன் பின்புதான் எனது பெற்றோர் என்னை இசை வகுப்பில் சேர்த்தனர்.
என்னுடைய 6 வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த நாகலட்சுமி என்பவரிடம் கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டேன். பிறகு, நெல்லை டி.கே.சுப்பிரமணியத்தின் மகள் சுப்புலட்சுமியிடம் 2 ஆண்டுகளும், சூர்யா என்பவரிடம் 3 ஆண்டுகளும் இசையை கற்றுக்கொண்டேன். கடந்த ஒன்பது வருடங்களாக கலைமாமணி காயத்ரி கிரீஷிடமும், சமீபகாலமாக சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தானகோபாலனிடமும் இசையைக் கற்று வருகிறேன்.
சென்னையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடக்கும் மார்கழி இசை விழாவில், முக்கிய சபாக்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் இசைக் கச்சேரிகளை வழங்கியுள்ளேன். 2022-ம் ஆண்டு நான் பாடிய ஐயப்ப சுப்ரபாதம் 18 ராகங்களில் இசைக்கப்பட்டு, மலேசியாவில் உள்ள ஜோஹர் ஐயப்ப கோவிலில் வெளியிடப்பட்டது. அந்தக் கோவிலில் இருக்கும் இறைவனை துயில் எழுப்புவதற்காக தினமும் காலையில் இசைக்கப்படுகிறது.
இசை துறையில் இதுவரை நீங்கள் பெற்ற பட்டங்கள், விருதுகள் என்னென்ன?
2017-ம் ஆண்டு நித்யஸ்ரீ மகாதேவனிடம் இருந்து 'பாலகானாம்ருத வாணி' என்ற பட்டத்தை பெற்றேன். 2018-19-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் 'கலை இளமணி' பட்டத்தைப் பெற்றிருக்கிறேன். 2022-ம் ஆண்டு 'புதுமைப் பெண்' விருதைப் பெற்றேன். கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற மும்மூர்த்திகள் விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் எனக்கு 'கான கிசல்யா' என்ற விருதை வழங்கினார்.
இசையில் சாதித்து வரும் நீங்கள், பள்ளிப்படிப்பில் எவ்வாறு கவனம் செலுத்துகிறீர்கள்?
என்னுடைய தாயும், ஆசிரியர்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். இசைக் கச்சேரியில் கலந்து கொள்வதற்காக நான் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் நாட்களில், நடத்தப்பட்ட பாடங்களை நண்பர்களின் உதவியுடன் படித்துவிடுவேன். பாட்டு, படிப்பு இரண்டுக்குமான நேரத்தை திட்டமிட்டு மேலாண்மை செய்வதால், இரண்டுமே நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. பத்தாம் வகுப்பில் 95 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
இசை துறையில் திறமை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் ஊக்கத்தொகை குறித்து சொல்லுங்கள்?
மத்திய அரசின் கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சென்டர் பார் கல்ச்சுரல் ரிசோர்சஸ் அண்ட் டிரைனிங் - சி.சி.ஆர்.டி) டெல்லியில் செயல்படுகிறது. இதன் இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். கிளாசிக்கல் ஆர்ட் பிரிவில் இசை, நடனம் இரண்டும் உள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் கற்றுக் கொண்டவை, உங்களுடைய திறமை ஆகியவை குறித்த தகவல்களை விண்ணப்பத்துடன் இணைத்து குருவின் சான்று ஒப்புதலுடன் அனுப்ப வேண்டும்.
செய்முறை, எழுத்துத்தேர்வு இரண்டுடன் கடைசியில் நேர்காணலும் உண்டு. இவற்றில் சிறப்பாக தேர்ச்சி பெறுபவர்களுக்கு, மத்திய அரசின் மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் துறை சார்ந்து இதுவரை கற்றுக்கொண்டது என்ன, இனி கற்றுக்கொள்ளப் போவது என்ன என்பது பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தேர்வு எழுதி புதுப்பிக்க வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும். ஆண்டுதோறும் 650 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இசை துறையைச் சார்ந்து எதிர்காலத்தில் நீங்கள் செய்ய நினைப்பது என்ன?
கர்நாடக சங்கீதம், பக்தி இசை போன்ற இசையின் பல பரிமாணங்களை முறைப்படி தொடர்ந்து கற்று, மக்களுக்கு தெய்வீக அனுபவத்தையும், ஆனந்தத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.