வில்வித்தையில் கலக்கும் சிறுமி கவிநயா

என் அண்ணனுக்கும் வில்வித்தையில் ஆர்வம் உண்டு. அவரை பயிற்சி பள்ளியில் சேர்த்தபோது, என்னையும் அம்பு எய்வதற்கு அனுமதித்தனர். எனது திறனைப் பார்த்த பயிற்சியாளர்கள், முறையான பயிற்சி அளிக்க முன் வந்தனர்.

Update: 2022-10-09 01:30 GMT

வில்வித்தை போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் 9 வயது சிறுமி கவிநயா, 'ஒலிம்பிக்கில் வெல்வதே தனது லட்சியம்' என்கிறார். சென்னை, பழவந்தாங்கலைச் சேர்ந்த ராஜாகிருஷ்ணனின் இளைய மகளான கவிநயா, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது…

"பாகுபலி திரைப்படத்தில் அம்பு எய்வதைப் பார்த்ததும் எனக்கு வில்வித்தை மீது ஆர்வம் உண்டானது. அப்பாவிடம் கூறி வில்லும் அம்பும் வாங்கினேன். அம்பு எய்வது எனக்கு பிடித்துப் போகவே, வில்வித்தைக்கான பயிற்சி வகுப்பில் என்னை சேர்க்க அப்பா முயற்சி செய்தார்.

அப்போது எனக்கு 3 வயது மட்டுமே நிறைவடைந்து இருந்ததால், மேலும் ஒரு வருடம் காத்திருக்குமாறு பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்" என்று வில்வித்தையில் ஆர்வம் ஏற்பட்டதைப் பற்றி கூறிய கவிநயா, பின்னர் பயிற்சியாளர்கள் தனக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டதைப் பற்றி விவரித்தார்.

"என் அண்ணனுக்கும் வில்வித்தையில் ஆர்வம் உண்டு. அவரை பயிற்சி பள்ளியில் சேர்த்தபோது, என்னையும் அம்பு எய்வதற்கு அனுமதித்தனர். எனது திறனைப் பார்த்த பயிற்சியாளர்கள், முறையான பயிற்சி அளிக்க முன் வந்தனர். தொடர்ந்து வில் எய்வதில் பயிற்சிகள் எடுத்து வந்தேன். எனது ஆர்வத்தை பாராட்டும் வகையில் ஒரு ஆண்டு முழுவதும் இலவசமாகவே பயிற்சி அளித்தனர்" எனக்கூறும் கவிநயா, தான் வாங்கிய விருதுகளைப் பட்டியலிட்டார்.

"கடந்த 2019-ம் ஆண்டு மாநில அளவிலான 8 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில், முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் பெற்றேன். 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கமும், அதே ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றேன். கடந்த மாதம் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில், 12-வது மினி, 9 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கான தேசிய அளவிலான வில் வித்தை போட்டியில் தனிப் பிரிவில் வெண்கலப் பதக்கமும், தமிழக குழு போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றேன்" என்ற கவிநயா, பல்வேறு கிளப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

"வருங்காலத்தில் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பேன்" என்றார் கவிநயா.

Tags:    

மேலும் செய்திகள்