இயற்கை வழியில் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்- நந்தினி

யோகா, மதம் சார்ந்தது அல்ல. இதுவும் ஒரு அறிவியல்தான். யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

Update: 2023-01-29 01:30 GMT

"யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி ஆகியவை முன்னோர்கள் நமக்குக் கொடுத்த பொக்கிஷங்கள்" என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் நந்தினி ஸ்ரீதரன். இவர் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலில் இளங்கலை மருத்துவப் பட்டம் பெற்றவர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பலருக்கு, இணையம் வழியாக ஆலோசனைகள் கொடுத்து நோய்களில் இருந்து அவர்கள் மீள்வதற்கு உதவுகிறார். அவரது பேட்டி…

"நான் பிறந்து வளர்ந்தது திருப்பூர் மாவட்டம். தந்தை நடராஜன் கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஜவுளி உற்பத்தித் தொழில் செய்து வருகிறார். தாய் சந்திரா இல்லத்தரசி. நான் குடும்பத்தோடு சென்னை திருவான்மியூரில் வசிக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வழி மருத்துவராகவும், யோகக்கலை நிபுணராகவும் ஆலோசனை அளித்து வருகிறேன். ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் மூத்த யோகா ஆலோசகராகவும் இருக்கிறேன்.

ஆங்கில மருத்துவ படிப்பைப் போலவே, ஐந்தரை ஆண்டுகள் படித்து மருத்துவ பட்டம் பெற்றிருக்கிறேன். மருந்து-மாத்திரைகள் இல்லாமல், நமது அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து, யோகாசன பயிற்சிகள் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வை அளித்து வருகிறேன்.

இயற்கை வழியில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா எவ்வாறு உதவுகிறது?

ஒவ்வொரு நோயை குணப்படுத்துவதற்கும் தனிப்பட்ட யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாக பயிற்சி செய்வதன் மூலம் எளிதாக நிவாரணம் பெறலாம். யோகா பயிற்சியால் நாள்பட்ட பிரச்சினைகளுக்குக்கூட சிகிச்சை அளிக்க முடியும். மனநல பாதிப்புகளுக்கும் தீர்வு காண முடியும்.

இயற்கை வழி மருத்துவத்தில், நோயாளிகளுக்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு, சிகிச்சைக்கான யோகாவை ஒவ்வொரு கட்டமாகச் சொல்லித் தருவோம். அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, அவர்களுடைய பிரச்சினைகள் படிப்படியாக குணமாகும். இந்த சிகிச்சையில் பிரச்சினையின் மூல காரணத்தைக் கண்டறிந்து, அதை குணப்படுத்துவதற்கான முறையைக் கையாள்கிறோம்.

இவ்வாறு கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமானவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி இருக்கிறேன். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிப்பவர்களுக்கு, ஆன்லைன் மூலமாக பல படிநிலைகளில் யோகா பயிற்சியைக் கற்றுக் கொடுக்கிறேன். உடல் பிரச்சினைகளில் இருந்து அவர்கள் விடுபட்ட பிறகு, நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான யோகாசனங்களையும் மெய்நிகர் காட்சி வழியாகவே கற்றுத் தருகிறேன்.

யோகா மற்றும் இயற்கை வழி மருத்துவம் மூலம் நோயை குணப்படுத்திய அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

மருத்துவப் படிப்பை முடித்து, ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். பஞ்சு போல் இருக்க வேண்டிய அவரின் நுரையீரல், கல் போல இறுகி இருந்தது. அதனால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். தொடர்ந்து நீண்ட நேரம் இருமிக் கொண்டே இருந்தார். அவர் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தது.

அவருக்கு படிப்படியாக சில எளிய பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து செய்ய வைத்தேன். நாள்தோறும் ஒவ்வொரு பயிற்சியாகத் தொடர்ந்து செய்ததில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. சில நாட்களிலேயே அவர் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரித்தது. தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பினார். அந்தப் பெண்ணும், அவரின் கணவரும் நெகிழ்ந்துபோய் எனக்கு நன்றி கூறினார்கள்.

மக்கள் நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிகள் பற்றிச் சொல்லுங்கள்?

இன்றைய காலகட்டத்தில் உடல்நலத்தைவிட, மனநல பாதிப்பு அதிகரித்துள்ளது. இயற்கைப் பேரிடரால் உலகமே அழிந்தாலும், மீண்டும் உணவு உற்பத்திக்கு விதைகள் தேவை என்பதால்தான், கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் அவற்றை பத்திரப்படுத்தி வைத்தார்கள் நம் முன்னோர்கள். அதுபோலவே யோகாவையும் நம் நல்வாழ்வுக்காக பொக்கிஷமாக கொடுத்துள்ளார்கள். யோகா, மதம் சார்ந்தது அல்ல. இதுவும் ஒரு அறிவியல்தான். யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

ஒரு நாளுக்கு 20 நிமிடங்களாவது யோகா பயிற்சி செய்வது நல்லது. ஒவ்வொரு நாளும் நான்கு யோகாசனங்கள், இரண்டு பிராணாயாமங்கள் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்வுக்கு இதுவே போதுமானது.


பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆசனங்கள்

யோகாசனங்கள், அனைவருக்கும் நன்மைகளை தரக்கூடியவை. இருந்தாலும், குறிப்பிட்ட சில ஆசனங்கள் பெண்களுக்கு அதிக பலன்களை கொடுக்கும். அவற்றை பற்றிய குறிப்புகள் இதோ…

அதோ முக ஸ்வனாசம்:

இந்த ஆசனம் எலும்புகளை வலிமையாக்கும். மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலின் தோற்றத்தை மேம்படுத்தும். அடிவயிற்றுத் தசைகளை உறுதிப்படுத்தும்.

பாலாசனம்:

இடுப்பு எலும்புகளை உறுதிப்படுத்தும். அடிவயிற்றுத் தசைகளை வலுவாக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைக்கும். செரிமான மண்டலத்தின் இயக்கத்தைச் சீராக்கும்.

ஹலாசனம்:

கழுத்து, தோள் மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தைக் குறைக்கும். கை மற்றும் கால் தசைகளை உறுதிப்படுத்தும். உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தும்.

விருக்சாசனம்:

கால்களில் உள்ள தசை நார்களை உறுதிப்படுத்தும். உடலின் சமநிலையை மேம்படுத்தும். இடுப்பு மற்றும் தொடை எலும்புகளுக்கும், தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும்.

உத்கட கோணாசனம்: இந்த ஆசனம், உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும். கைகள், இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள தசைகளை உறுதியாக்கும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

நவாசனம்:

அடிவயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து தசைகளை உறுதியாக்கும். செரிமானத்தைச் சீராக்கும். தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும். முதுகு மற்றும் இடுப்பு எலும்புகளை வலுவாக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்