சமூக மாற்றத்துக்கு குழந்தை வளர்ப்பு முக்கியமானது - ஷீத்தல் சத்யா

எப்போதும் குழந்தைகளிடம், அவர்களுடைய நிலையில் இருந்து யோசித்து பேச வேண்டும். அவர்களுக்கு ஏற்றதுபோல தன்மையாக பேசும்போது, தயக்கமின்றி அனைத்தையும் வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். இது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது.

Update: 2023-08-06 01:30 GMT

"நமது சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் அதிக விதிமுறைகளை வகுத்திருக்கிறோம். பெண்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று ஆண்களுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். தன்னுடைய நண்பர்கள் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசினால்கூட, அவர்களையும் தடுத்து, திருத்தும் வண்ணம் ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இத்தகைய வளர்ப்புதான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்" என்கிறார் ஷீத்தல் சத்யா.

சென்னையைச் சேர்ந்த இவர் குழந்தை வளர்ப்பு பயிற்சியாளராகவும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகராகவும் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, தனக்கான பாதையையும் தேர்வு செய்து, அதில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரது பேட்டி.

"நான் பொறியியல் படிப்பை முடித்து விட்டு ஐ.டி நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினேன். எனது திருமணத்தை முன்னிட்டு அந்த பணியில் இருந்து விலகினேன். திருமணத்துக்குப் பின்பு, குழந்தை வளர்ப்பு பற்றி கற்றுக்கொடுக்கும் தனிப்பட்ட பாடப்பிரிவு இருப்பதை அறிந்தேன். அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்ததால், அமெரிக்க நாட்டிற்கு சென்று அந்த படிப்பில் சேர்ந்தேன்.

என்னுடைய பயிற்சியாளரின் ஊக்குவிப்பால், குழந்தை வளர்ப்பு பற்றிய அனைத்து பாடங்களையும் கற்றுத் தேர்ந்தேன். படிப்பு முடிந்ததும் எனக்கு அங்கேயே வேலை கிடைத்தது. அங்கு சில காலம் பணியாற்றினேன். குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு, அமெரிக்க மக்களிடம் அதிகமாகவே இருந்தது. ஆனால், நமது நாட்டில் இது குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதாக உணர்ந்தேன். அதனால் மீண்டும் தாய்நாடு திரும்பி, கர்ப்பிணிகளுக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்புக்கான பயிற்சிகள், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

கர்ப்ப காலத்தில் சில எளிய பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவது, பிரசவம் எளிதாக நடக்க உதவும். அத்தகைய பயிற்சிகளை கர்ப்பிணிகளுக்கு கற்றுக் கொடுக்கிறேன். இயல்பாகவே எனக்கு கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். எனவே இது தொடர்பான அனைத்து படிப்புகளையும் படித்து முடித்திருக்கிறேன். இப்போதும் தொடர்ந்து படித்து வருகிறேன்.

கர்ப்பிணி பெண்களுக்கான உங்களது ஆலோசனைகள் என்ன?

கர்ப்ப காலத்தில் சத்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தை சிறிதளவு சாப்பிடுவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எத்தகைய உணவாக இருந்தாலும், அதை அதிகமாக சாப்பிடாமல் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்கள் வரை உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது. அதன் பின்னர், மருத்துவரின் ஆலோசனைப்படி சுலபமான யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

எப்போதும் படுக்கையிலேயே இருக்காமல், சுறுசுறுப்பாக இருப்பது சுகப்பிரசவம் நடக்க உதவி புரியும். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எவ்விதமான உணவுகளையும் சாப்பிடக்கூடாது. பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் மரபணுவை பொறுத்தே குழந்தையின் நிறம் அமையும். கர்ப்ப காலத்தில் உணவு கட்டுப்பாடு முக்கியமானது.

கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில், உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். அப்போது மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி உங்களின் கருத்து என்ன?

தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தைத் தவிர, வேறு எதற்காகவும் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கக் கூடாது. குழந்தை பிறந்த முதல் மற்றும் இரண்டாம் நாளில் தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதற்காக, உடனே தாய்ப்பால் கொடுக்கும் எண்ணத்தை கைவிடக்கூடாது. மாறாக, குழந்தையை தாய்ப்பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும்.

தாய்ப்பால் கொடுக்கும்போது, அது விரைவாக செரிமானம் ஆகி, அதில் உள்ள சத்துக்கள் குழந்தைக்கு முழுமையாக கிடைக்கும். தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு அதிகரிக்கும். உளவியலின்படி அத்தகைய குழந்தைகள், சுதந்திரமாக யோசிப்பவர்களாக இருப்பார்கள்.

2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரையில், மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை தாய் உட்கொள்வது அவசியம்.

குழந்தை வளர்ப்புக்கான உங்களின் ஆலோசனை என்ன?

எப்போதும் குழந்தைகளிடம், அவர்களுடைய நிலையில் இருந்து யோசித்து பேச வேண்டும். அவர்களுக்கு ஏற்றதுபோல தன்மையாக பேசும்போது, தயக்கமின்றி அனைத்தையும் வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். இது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை வரும்போது, அதற்கான காரணத்தை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். குழந்தைதானே என்று அலட்சியப்படுத்தினால், அது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். பெற்றோர் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கான பொருட்களை, அவர்களையே தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். இது அவர்கள் சுதந்திரமாக யோசிக்க வழிவகுக்கும்.

சமூகத்துக்காக நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் என்ன?

தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதன் பலனாக, பல தாய்மார்களும் தாய்ப்பாலை தானம் செய்து வருகிறார்கள். அதனை நானே நேரடியாக மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்களின் உதவியுடன் தேவைப்படும் தாய்மார்களுக்கு கொடுத்து வருகிறேன். எனது வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வருகிறேன். எனது பணிகளுக்காக விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அது எனக்கு மேலும் உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்