பெண்களுக்கு பிட்னஸ் முக்கியமானது- சிமு ஜார்ஜ்
இசையுடன் செய்யும் ஜும்பா பிட்னஸ் பயிற்சி, மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகம் தரும். இதை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத கொழுப்பு குறையும்.;
"சிரித்து மகிழ்ந்து, ஆடி ஓடி விளையாடும் குழந்தைகளே மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் இந்த காலகட்டத்தில், பெரியவர்களின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. பொருளீட்டுதல், வேலை, தொழில், குடும்ப பொறுப்புகள் என்று மனஅழுத்தத்தை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைப் போக்குவதற்காக பலரும் பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். அந்தவகையில், மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கு 'ஜும்பா பிட்னஸ் பயிற்சி' எனும் புதிய வழியைக் காட்டுகிறார் சிமு ஜார்ஜ்.
"சென்னை, மும்பை போன்ற நகரங்களில், சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த நான், ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து விலகினேன். அதன் பின்பு 6 ஆண்டுகள் தொடர்ந்து ஜும்பா பிட்னஸ் பயிற்சி பெற்றேன். பிறகு அதில் பயிற்சியாளர் நிலையை அடைந்தேன். கடந்த 12 ஆண்டுகளாக ஜும்பா பிட்னஸ் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.
2006-ம் ஆண்டு சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட ஜும்பாவை, நடனம் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது ஒரு 'பிட்னஸ் பயிற்சி' என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஜிம்மில் இரண்டு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சிக்குப் பதிலாக, ஜும்பா பிட்னஸ் பயிற்சியை ஒரு மணி நேரம் செய்தால் போதும். சமமான பலன்கள் கிடைக்கும்.
இசையுடன் செய்யும் ஜும்பா பிட்னஸ் பயிற்சி, மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகம் தரும். இதை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத கொழுப்பு குறையும். உடல் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் மாறும். தொடர்ந்து ஜும்பா பிட்னஸ் பயிற்சியில் ஈடுபட்டால், தினமும் நம்மால் அதைச் செய்யாமல் இருக்க முடியாது.
இயற்கையாகவே பெண்களுக்கு 30 வயதுக்குமேல் உடல் வலிமை குறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து ஜும்பா பயிற்சி செய்பவர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். எலும்பு வலுப்பெறும். இளமையுடன் இருக்க முடியும். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கை முறையிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அடுத்தவரை நேசிப்பது போல், உங்கள் உடலையும் நேசிப்பீர்கள். உடல் நலத்தை அக்கறையுடன் கவனிப்பீர்கள்.
ஒவ்வொருவருக்கும் உடல் அமைப்பு வேறுபட்டது. சரியான முறையில் பயிற்சி செய்யாவிட்டால் உடலில் தசைப்பிடிப்பு உள்ளிட்ட எதிர்விளைவுகள் ஏற்படும். எனவே சரியான பயிற்சியாளரின் கண்
காணிப்பில், ஜும்பா பிட்னஸ் பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது.
கொரோனா பரவல் காலத்தில், என்னுடைய துறைசார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதினேன். அந்த சமயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனையிலேயே தொடர்ந்து பல நாட்கள் தங்கி வேலை பார்க்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை இருந்தது. தங்கள் மனஅழுத்தத்தைப் போக்குவதற்காக, அவர்களாகவே ஏதாவது ஒரு பாடலைப்போட்டு நடனம் ஆடினார்கள். அதுபற்றிய பல வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவின.
அப்போதுதான் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நாம் ஏன் ஜும்பா பிட்னஸ் பயிற்சி தரக்கூடாது? என்று நினைத்தேன். அதன்படி, தொடர்ந்து 72 மணிநேரம், 260 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஜும்பா பிட்னஸ் பயிற்சி செய்து காட்டி, கற்றுக் கொடுத்தேன்.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் மலேசியா, ரஷியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். அதை என்னுடைய வாழ்நாள் சாதனையாக நினைத்து மகிழ்கிறேன்.
ஒரு தனியார் அமைப்பின் உதவியுடன் 20 பெண் குழந்தைகளைத் தேர்வு செய்தேன். அவர்கள் என்னுடன் தொடர்ந்து 5 நாட்கள் ஜும்பா பிட்னஸ் பயிற்சி செய்தால், ஒரு தனியார் நிறுவனம் அவர்
களுக்குத் தலா ரூபாய் 200 பரிசு கொடுக்கும் என்று அறிவித்தேன். பலர் அதில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலி மூலம் பரிசு வழங்கப்பட்டது. இந்த
முயற்சிக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும் நிறைய உதவிகள் கிடைத்தன.
ஜும்பா பயிற்சியின் ஒரு பகுதியான 'சூசைட்டர் பிளாண்ட்' என்ற பயிற்சியை 3 நிமிடத்தில் 114 முறை செய்தேன். இந்தப் போட்டியில் தான் எனக்கு 'மிஸ் வெல்னஸ் இண்டர்நேஷனல் 2021' என்ற விருது கிடைத்தது.
நான் 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தடகள பயிற்சியில் ஈடுபட்டேன். சுமார் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தடகளத்தில் ஈடுபட்டு மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றேன். பின்பு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வாங்கினேன்.
விளையாட்டுக்கும், வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம், விளையாடலாம் என்று உறுதி செய்தேன். அந்த அளவுக்கு ஜும்பா பயிற்சி மூலம் உடல் நலத்தை பராமரிக்க முடிந்தது" என்று கூறிய சிமு ஜார்ஜ் உடல் நலத்தை பேணிக் காப்பதில் அனைவருக்கும் உதாரணமாகத் திகழ்கிறார்.