சுவை மிகுந்த பாரம்பரிய பலகாரங்கள்

கமர்கட்டு, சாமை, பாசிப்பருப்பு, ஆளிவிதை, பலவகை சிறுதானிய அவல், கம்பு, பாதாம், கருப்பு கவுனி, ராகி, தினை லட்டு என்று சுமார் 15 வகையான லட்டுகளைத் தயாரிக்கிறேன். வாட்ஸ்ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆர்டர் எடுத்து கூரியரில் பொருட்களை அனுப்பி வைக்கிறேன்.

Update: 2022-10-23 01:30 GMT

"எனது மகளின் பிறந்த நாளுக்கு ஆரோக்கியமாகவும், புதிதாகவும் ஏதாவது செய்யலாம் என்று எண்ணி 'ஆளிவிதை லட்டு' தயாரித்துக் கொடுத்தனுப்பினேன். அது அவளது வகுப்பில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்து போனதால் அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அவ்வாறு பல பெற்றோர்கள் என்னை அணுகி லட்டு பற்றி கேட்டபோது, இதையே தொழிலாக செய்யும் எண்ணம் தோன்றியது. இப்படித் தான் பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன்" என்று தனது தொழில் உருவானதைப் பற்றி தெரிவிக்கிறார் சிசிலி ஜெயப்பிரகாஷ். சென்னையில் வசிக்கும் இவர் 'புதுமைப் பெண்கள்', 'பெண் சிற்பி' போன்ற பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

"நான் அறிவியலில் மின்னணு ஊடகப் பிரிவில் இளங்கலை முடித்திருக்கிறேன். தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். கணவர் ஜெயபிரகாஷ் சிங்கப்பூரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலைச் செய்து வருகிறார். எனது மகள் நித்திகா ஏழாம் வகுப்பும், மகன் கவியரசன் மூன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

பாரம்பரிய தின்பண்டங்களைத் தயாரிக்கும் எண்ணம் எப்போது வந்தது?

புத்தகங்களில் படித்தும், தெரிந்தவர்களிடம் கேட்டும் தின்பண்டங்களைச் செய்ய கற்றுக் கொண்டேன். உரல், உலக்கை உள்ளிட்டவற்றை வாங்கி பாரம்பரிய முறையில் தின்பண்டங்களை தயாரித்தேன். உளுந்தங்களி, கறுப்பு உளுந்துப் பொடி, வரகரிசி பொங்கல் என்று பாரம்பரிய உணவுகளை குடும்பத்தினருக்கு கொடுத்தேன். இதனால் அவர்களின் ஆரோக்கியம் அதிகரித்தது.

பல ஆண்டுகளாக எனது குழந்தைகளின் பிறந்த நாளில் அவர்களின் வகுப்புத் தோழர்களுக்கு சாக் லெட், கேக் ஆகியவற்றுக்கு பதிலாக தேன் நெல்லிக்காய், கமர்கட்டு, தேங்காய் பர்பி போன்ற ஆரோக்கியமான பாரம்பரிய இனிப்புகளையே தயாரித்துக் கொடுத்து அனுப்புகிறேன்.

என்னென்ன தின்பண்டங்களைத் தயாரிக்கிறீர்கள்?

கமர்கட்டு, சாமை, பாசிப்பருப்பு, ஆளிவிதை, பலவகை சிறுதானிய அவல், கம்பு, பாதாம், கருப்பு கவுனி, ராகி, தினை லட்டு என்று சுமார் 15 வகையான லட்டுகளைத் தயாரிக்கிறேன். வாட்ஸ்ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆர்டர் எடுத்து கூரியரில் பொருட்களை அனுப்பி வைக்கிறேன்.

தின்பண்டங்களை கட்டித் தருவதற்காக பனையோலையால் செய்த மிட்டாய் பெட்டிகளைக் கன்னியாகுமரியில் இருந்து வரவழைத்து அதற்குள் அடைத்து விற்பனை செய்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் பீட்ரூட் மால்ட், நெல்லிக்காய் ஜாம், பூண்டு தொக்கு, முருங்கைக்கீரைப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, மருதாணி வேப்பிலை உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து ஆர்கானிக் சீயக்காய் உள்ளிட்டவற்றை தயாரிக்கிறேன்.

கம்பு, ராகி, வரகு, கருப்பு கவுனி உள்ளிட்ட ஏழு வகையான அவல், உலர் பழங்கள் மற்றும் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சத்தான காலை சிற்றுண்டிக்கான கலவையும் தயாரிக்கிறேன். அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சூடான பாலில் போட்டு வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து குடிக்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்