புத்தகங்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் - ஜெனிபர்

'ஒரு நல்ல புத்தகம், ஆயிரம் சிறைச்சாலைகளை மூடிவிடும்' என்று அறிஞர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

Update: 2023-01-22 01:30 GMT

"புத்தகம் வாசிக்கும் பழக்கம் அறிவை விரிவாக்கி, கற்பனை வளத்தை அதிகரிக்கும். பல்வேறு புத்தகங்களைப் படிப்பதால் உண்டாகும் ஆர்வம், பாடப்புத்தகங்களையும் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவும். வாழ்க்கையில் எந்தப் பிரச்சினை வந்தாலும், அதை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மன வலிமையையும், பக்குவத்தையும் கொடுக்கும்" என புத்தக வாசிப்பு பழக்கத்தின் பெருமைகளைக் கூறுகிறார் கல்லூரி மாணவி ஜெனிபர்.

படிப்பில் கெட்டிக்காரரான இவர் ஆங்கிலப் பேச்சு போட்டி மற்றும் கவிதை எழுதுதல், புகைப்படம் எடுத்தல், கழிவுப் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். மத்திய கல்வித் துறையுடன் இணைந்து, 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' அமைப்பு நடத்திய மென்பொருள் தயாரிக்கும் போட்டியில், தனது குழுவை வழிநடத்தி முதல் பரிசு பெறச் செய்திருக்கிறார் ஜெனிபர்.

தூத்துக்குடி மாவட்டம், செபத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெனிபர், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தனியார் கல்லூரியில், கணினி அறிவியலில் முதுகலைப் பொறியியல் படிக்கிறார். இவரது தந்தை சுதாகர், மரப்பலகை வியாபாரம் செய்து வருகிறார். தாய் எப்சிபா குடும்பத் தலைவி. இவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.

பல்வேறு புத்தகங்கள் வாசிப்பதும், தேவாலயத்தின் பாடகர் குழுவில் இசைக்கருவிகள் இசைத்துப் பாடுவதும் தனக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்கிறார் ஜெனிபர். அவருடன் நடந்த உரையாடல்.

புத்தகம் வாசிக்கும் ஆர்வம் எப்படி வந்தது?

நான் மழலையர் பள்ளியில் படிக்கும்போதே, பெற்றோர் எனக்கு புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்தினர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க கட்டுப்பாடு விதித்தனர். நிறைய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர். அதனால் புத்தக வாசிப்பில் தானாகவே ஆர்வம் உண்டானது.

கடந்த சில ஆண்டுகளாக, சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் சுமார் 500 புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை வாசிக்கிறேன்.

பெற்றோர், குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிவிட்டால், அவர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக்க முடியும். இதனால் குழந்தைகள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பார்கள். நல்ல புத்தகங்கள் அவர்கள் வாழ்க்கையை நல்வழிப்படுத்தும்.

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது பற்றி சொல்லுங்கள்?

எனக்குப் பேசுவது மிகவும் பிடிக்கும். புத்தக வாசிப்பால் ஆங்கிலத்தில் கவிதை எழுதும் திறனும் தானாகவே வந்தது. அதனால் பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகளில் எளிதாக வெற்றி பெற முடிந்தது. பேசுவதில் உள்ள ஆர்வம் காரணமாக, கல்லூரி விழாக்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். எந்தப் போட்டி அறிவித்தாலும், அதில் கலந்து கொண்டு, முயற்சி செய்து வெற்றி பெறுவேன்.

எனக்குத் தெரியாத கலையாக இருந்தாலும் ஆர்வமுடன் கற்றுக்கொள்வேன். அவ்வாறுதான் ஓவியம் வரைதல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதைக் கற்றுக்கொண்டேன். அது தொடர்பான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்றிருக்கிறேன்.

மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கவிதைப் போட்டி ஒன்றில், 'இக்காலத்துப் பெண்கள் ஆண் களுக்கு நிகராக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அதேசமயம் ஆண்களை விட திறமையாக பல விஷயங்களை பெண்களால் செய்ய முடியும்' என்ற பொருளில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

தேசிய அளவில் முதல் பரிசு பெற்ற உங்கள் கண்டுபிடிப்பு பற்றி கூறுங்கள்?

மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் இணைந்து, 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' என்ற அமைப்பு, கல்லூரி மாணவர்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் போட்டியை ஆண்டுதோறும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. இதில், 2021-ம் ஆண்டு, நாடு முழுவதும் இருந்து 2033 மாணவர் குழுக்கள் பங்கேற்றன.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டில் உள்ள பிரச்சினைகளை, அந்த அமைப்பின் இணையதளத்தில் பதிவேற்றியிருப்பார்கள். அவற்றுக்குத் தீர்வு காணும் விதமாக மாணவர்கள் புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்பதே போட்டி. அதில் கலந்து கொண்ட எங்கள் குழுவினர் இணைந்து, 'ஸ்டூடண்ட் இன்பர்மேஷன் போர்ட்டல்' என்ற செயலியை உருவாக்கினோம்.

ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போதே, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கிறோம். அதன்பிறகு, அடுத்தடுத்த பள்ளிகளில் சேர்க்கும்போது மீண்டும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கான அலைச்சலைத் தவிர்த்து, நேரத்தை மிச்சப்படுத்த எங்கள் கண்டுபிடிப்பு உதவியது.

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், எனது குழு முதல் இடத்தில் தேர்வாகி, ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றது. ஒரு சான்றிதழை ஒருமுறை பதிவேற்றம் செய்து, மாணவருக்கான அடையாள எண்ணைக் கொடுத்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் நம் தேவைக்கேற்ப எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே எங்கள் செயலியின் சிறப்பு.

கழிவுப் பொருட்களைப் பயனுள்ளப் பொருட்களாக மாற்றுவது பற்றி சொல்லுங்கள்?

மின்னணு சாதனங்களின் கழிவுகள், உலகையே அச்சுறுத்தும் ஆபத்தாக உருவெடுத்து வருகிறது. எனவே, அந்தக் கழிவுகளில் இருந்து கடிகாரங்கள், அலங்காரப்பொருட்கள் செய்திருக்கிறேன். பழுதான கணினியின் உதிரிப் பாகங்களில் இருந்து காதணி, கழுத்தணி உள்ளிட்ட ஆபரணங்களையும், பழைய குறுந்தகடுகளைக் கொண்டு கடிகாரம், அலங்கார ஓவியங்கள், சாவிக்கொத்து போன்றவற்றையும் தயாரித்திருக்கிறேன். கிழிந்த பருத்தித் துணிகளைக் கொண்டு கால்மிதி தயாரித்துள்ளேன்.

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு உங்கள் ஆலோசனை என்ன?

'ஒரு நல்ல புத்தகம், ஆயிரம் சிறைச்சாலைகளை மூடிவிடும்' என்று அறிஞர் ஒருவர் சொல்லி இருக்கிறார். வாசிப்பு என்பது, தானே உணர வேண்டிய அலாதியான அனுபவம். உங்கள் ஆர்வத்துக்கு ஏற்றபடியோ, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் கேட்டோ, நல்ல புத்தகத்தை வாசியுங்கள். அதன்பிறகு, அடுத்தடுத்த புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்கும் ஆர்வம் உங்களுக்குத் தானாக வந்துவிடும். வாசிப்புப் பழக்கம், உங்களுக்கு நல்ல நண்பனாகத் துணையிருக்கும். மந்திரியாக ஆலோசனை கூறும். ஆசிரியராக கற்பிக்கும். மொத்தத்தில், நல்ல புத்தகங்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் தரும். அதனால் ஒரு முறையாவது நல்ல புத்தகம் ஒன்றை வாசித்துப் பாருங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்