கருமையும் அழகுதான் - சுனைனா
நம்முடைய எதிர்காலம் சரும நிறத்தில் இல்லை. நமது செயல்பாட்டில்தான் இருக்கிறது என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். நிறப்பாகுபாட்டை அவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்தே நீக்க வேண்டும்.;
சரும நிறம் தொடர்பான பாகுபாட்டை, குழந்தைப் பருவத்திலேயே மனதில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார் சுனைனா. அதற்கான அவரது முயற்சி குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிடம் இருந்து ஆரம்பிக்கிறது. இதோ அவரது பேட்டி...
"கேரளாவில் பிறந்த நான், படித்தது, வளர்ந்தது எல்லாம் கோவை மாவட்டத்தில்தான். திருமணத்துக்குப் பின்பு தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். கல்லூரி படிப்பை முடித்ததும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் அதிகாரியாக 5 ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் தனியாக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தால், அந்த வேலையில் இருந்து விலகி என்னுடைய பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தேன்".
நீங்கள் பொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபடக் காரணம் என்ன?
கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு இருந்த நேரத்தில்தான் என்னுடைய மகன் பிறந்தான். வெளியில் செல்ல முடியாத காரணத்தால், அவன் விளையாட பொம்மைகள் வாங்கு வதற்காக ஆன்லைனில் தேடினேன். அப்போதுதான் ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகளுக்காக, பிரத்யேகமாக கருமை நிற பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. அதைப் பார்த்தபோது, நம்முடைய நாட்டில் 90 சதவிகித மக்களின் சருமம் மாநிறம் மற்றும் கருமை நிறத்தில்தான் உள்ளது. ஆனால், இங்கு விற்பனை செய்யப்படுகிற அனைத்து பொம்மைகளும் வெள்ளையாக இருக்கின்றன. இது நடைமுறைக்கு முற்றிலும் முரணாக இருந்தது. இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே, நான் பொம்மை தயாரிப்பு தொழிலைத் தொடங்கினேன்.
நிறங்கள் அடிப்படையிலான சமூகத்தின் பார்வையால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா?
நான் கர்ப்பமாக இருந்தபோது என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் "உனது பாட்டியைப்போல உன்னுடைய குழந்தையும் கருப்பாக பிறக்கக்கூடும். குழந்தை கலராக பிறக்க அதை சாப்பிடு, இதை சாப்பிடு" என்று எனது குழந்தையின் நிறம் குறித்தே ஆலோசனை கொடுத்தார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வாறு நிறம் குறித்து பேசியவர்களுக்கு, "என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்போது, நான் ஏன் குழந்தையின் நிறத்தைக் குறித்து கவலைப்பட வேண்டும்" என்ற என்னுடைய கேள்வியே பதிலாக அமைந்தது.
நிறத்தின் அடிப்படையிலான வேறுபாடு, குழந்தைகளிடையே எத்தகைய தாக்கத்தை உண்டாக்குகிறது என்று நினைக்கிறீர்கள்?
ஒரு குழந்தையின் நிறத்துக்கு, அது கருவில் இருக்கும் போதிலிருந்தே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளிடம் 'நீ கருப்பாக இருப்பதால், எதிர்காலத்தில் உன்னை யார் திருமணம் செய்துகொள்வார்?' என்ற கேள்வியை கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நிறம் குறித்த இந்த கேலியும், கிண்டல்களும் அவர்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் இருந்தும் எழுகின்றன. இதனால் தங்களின் நிறம் குறித்து அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இது வளரும் குழந்தைகளிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும், சந்தோஷத்தையும் குறைத்துவிடும். 'நம்முடைய எதிர்காலம் சரும நிறத்தில் இல்லை. நமது செயல்பாட்டில்தான் இருக்கிறது' என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். நிறப்பாகுபாட்டை அவர்களின் ஆரம்ப காலத்தில் இருந்தே நீக்க வேண்டும்.
நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறதே?
இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை எனது தயாரிப்புகளின் மூலம் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நான் தயாரிக்கும் ஒவ்வொரு பொம்மைக்கும் தனித்துவமான குணம், பழக்கவழக்கம், கனவு, சூழல், பொழுதுபோக்கு மற்றும் திறமை ஆகியவை சேர்ந்த ஒரு கதையை பின்புலமாக வைக்கிறேன். பொம்மையை வாங்குபவர்களுக்குள் இந்த கதை ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இத்தகைய சிறு மாற்றங்கள்தான் பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
நீங்கள் தயாரிக்கும் பொம்மைகள் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையில் உகந்தவை?
ஆர்கானிக் லினன் பருத்தி, உல்லன் நூல், தேங்காய் சிரட்டைப் பொடி, 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டர் பைபர் ஆகியவற்றை கொண்டு கைகளாலேயே இந்த பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
வாடிக்கையாளர்களிடம் இத்தகைய பொம்மைகளுக்கு கிடைத்த வரவேற்பு எவ்வாறு இருந்தது?
எனது அனைத்து பொம்மைகளுக்கும் ஒரு தனித்துவமான, அழகான வடிவம் மற்றும் அமைப்பை கொடுக்க முயற்சித்தேன். இதற்கான தகவல்களை திரட்டுவதற்கும், கதைகளை உருவாக்குவதற்கும் எனக்கு ஒன்றரை வருட காலம் ஆனது. நான் நினைத்தவாறு பொம்மைகளை வடிவமைக்க காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்ததைப் போல என்னுடைய தயாரிப்பு வெளியானது. முழுவதும் பெண்கள் குழுவால் பொம்மைகள் உருவாக்கப்படுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறுவனத்தை தொடங்கிய ஆரம்ப காலத்தில் சில கண்காட்சிகளை நடத்தினேன். அதில் எனது தயாரிப்பைப் பார்த்த அனைவருமே அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். என்னுடைய முயற்சிக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.
இந்தியாவில் பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் பாரம்பரியமாக செய்யப்படுகின்றன. எனினும், அவற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சற்று குறைவாகவே இருக்கிறது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கைவினை தயாரிப்பு என்பதாலேயே எனது பொம்மைகளை விரும்பி வாங்குகிறார்கள்.
வெள்ளை நிறம்தான் அழகு எனும் மனப்பான்மையை மாற்றுவதற்கான உங்கள் ஆலோசனைகள் என்ன?
அழகு என்பது சருமத்தின் நிறத்தில் இல்லை. நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கை மற்றும் நல்ல குணம்தான் உண்மையான அழகு. வெளிப்புற அழகு, நமக்கு மனநிறைவை கொடுக்காது. பல நாடுகளில் உள்ள மக்கள் தங்களுடைய சரும நிறத்தை கருமையாக மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால், நாம் வெள்ளை நிறமாக மாறுவதற்காக பணத்தை செலவு செய்கிறோம்.
கருமை மற்றும் மாநிற சருமம் கொண்டவர்களுக்கு பல்வேறு வண்ணங்கள் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கும். அத்தகைய வண்ணங்கள் கொண்ட ஆடை மற்றும் அணிகலன்கள் அணிவதோடு, தன்னம்பிக்கை, திறன் மற்றும் ஆளுமை மூலமாக நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள முடியும்.
உங்களைப் போல புதிய முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இணையம் மூலம் பல்வேறு தகவல்களையும், ஆலோசனைகளையும் நம்மால் பெற முடியும். நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் வேலை எந்த துறையைச் சார்ந்ததாக இருந்தாலும், அது தொடர்பான ஒரு சிறிய அமைப்போ, குழுவோ நிச்சயமாக இருக்கும். அதன்மூலம் உங்களுக்கு தேவையான தகவல்கள், பயிற்சி, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவற்றை பெற முடியும். அத்தகைய அனுபவம் மற்றும் அணுகுமுறையின் மூலம் உங்கள் இலக்கை நோக்கி செயல்படுங்கள், உங்களால் வெற்றி பெற முடியும்.