தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள்- திவ்யா

வேலை தேடி பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்த நான், அவை எல்லாவற்றையும் எனது முயற்சியால் தகர்த்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

Update: 2023-02-19 01:30 GMT

ளைய தலைமுறையினர் சிலர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி நேரத்தை தொலைத்துக்கொண்டு இருக்கும் வேளையில், பலர் அவற்றை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி சமூகத்துக்கு உதவி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த திவ்யா. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு அளிக்கும் விதமாகவும், வேலை தேடும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி இருக்கிறார். அதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். மனநல பயிற்சியாளராக பணியாற்றிவரும் திவ்யாவுடன் ஒரு சந்திப்பு.

நீங்கள் மனநல பயிற்சியாளராக உருவானதன் பின்னணி என்ன?

நான் படித்து முடித்துவிட்டு வேலை தேடியபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களே, என்னை மனநல பயிற்சியாளராக உருவாகத் தூண்டியது. கல்லூரி இறுதியாண்டு படித்தபோது நடைபெற்ற கேம்பஸ் இண்டர்வியூவில் திறனறி தேர்வில் கலந்துகொண்டபோது, அதைப் பற்றிய முழுமையான தெளிவு இல்லாததால் தோல்வி அடைந்தேன். படிப்பை முடித்ததும் தான் வாழ்க்கையின் உண்மையான நிலையைத் தெரிந்துகொள்ள நேரிட்டது.

கல்விக் கடன் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக, 'வேலை' என்பது எனக்கு முக்கியமான தேடுதலாக இருந்தது. எனவே, பல்வேறு வேலைவாய்ப்பு வலைத்தளங்கள் மூலம் தினமும் ஏராளமான விண்ணப்பங்களை சமர்ப்பித்தேன். ஒரு நாளுக்கு 50-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பினேன்.

வேலையில் எனக்கு முன் அனுபவம் இல்லை என்பதாலும், பிரபலமான கல்வி நிறுவனங்களின் பின்புலம் இல்லாததாலும், பட்டய படிப்பைத் தவிர வேறு எந்த வகுப்புகளுக்கும் செல்லாததாலும், பல நிறுவனங்கள் என்னை முதல் சுற்றிலேயே வெளியேற்றின. அதையும் தாண்டி சில நிறுவனங்கள் என்னை தேர்வு செய்தபோது, அவர்கள் நிர்ணயித்த சம்பளம் எனது போக்குவரத்து செலவுக்குக்கூட போதுமானதாக இல்லை.

சில நிறுவனங்கள் வேலை தருவதாகக்கூறி டெபாசிட்டாக பெரும் தொகையை கேட்டார்கள். வேலை தேடி பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்த நான், அவை எல்லாவற்றையும் எனது முயற்சியால் தகர்த்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

அதன்பிறகு என்னைப்போல சிரமங்களை சந்திக்கும் நபர்களுக்கு வழிகாட்டும் எண்ணத்துடன் மனநல பயிற்சியாளராக மாறினேன்.

இதன் மூலம் உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

பணியாற்றுவதற்கு முன்பு, எனது ஒவ்வொரு தேவைக்கும் நான் மற்றவர்களையே சார்ந்திருந்தேன். ஆனால் சம்பாதிக்கத் தொடங்கியதும், எனது தேவைகளை நானே பூர்த்தி செய்துகொண்டதால் தன்னம்பிக்கை அதிகரித்தது. பணியாற்றுவதற்கு முன்பு எல்லா விஷயங்களிலும் ஒருவிதபயத்துடன் முடிவுகளை எடுத்த நான், பின்னாளில் எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் முடிவெடுக்கத் தொடங்கினேன்.

இன்றைய தலைமுறையினரின் பலவீனமாக நீங்கள் நினைப்பது என்ன?

தோல்வியைப் பற்றிய பயம் தான் இன்றைய தலைமுறையின் பலவீனம். ஏனெனில், பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு வெற்றி மட்டுமே பெருமையானது என்று சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையிலேயே வளர்க்கின்றனர். வாழ்க்கையில் தோல்வியும் வரும். அதன் மூலமும் அனுபவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை கற்றுக்கொடுக்க மறந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக இளைய தலைமுறையினர் இடையே தோல்வி பற்றிய பயம் அதிகமாக இருக்கிறது. அதனால் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். உதாரணமாக, தேர்வில் தோல்வி அடைவதால் மாணவர்கள் தற்கொலை முடிவை எடுப்பதை சொல்லலாம்.

இந்த எண்ணத்தை மாற்ற, மாணவர்களின் மன நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இது ஆசிரியர்கள் நினைத்தால் மட்டும் முடியாது. பெற்றோர்களும், பிள்ளைகள் தோல்வி அடையும்போது அவர்களைத் திட்டாமல் தட்டிக்கொடுக்க வேண்டும். முதல் மாணவராகத் தான் வர வேண்டும் என்ற அழுத்தத்தை பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாது.

வேலை தேடும் இளைய தலைமுறையினர் எப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்க வேண்டும்?

வேலை தேடுபவர்கள் ஆரம்ப நிலையில் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போதே அதில் கண்டிப்பாக தேர்வாகிவிட வேண்டும் என்று எண்ணக்கூடாது. அத்தகைய மனநிலையானது தோல்வியைச் சந்திக்கும்போது மிகுந்த சோர்வைத் தரும். அதற்கு பதிலாக இ்ண்டர்வியூவின் ஒவ்வொரு படிநிலையையும் அறிந்துகொண்டு, அதில் இருந்து தேவையான அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் 7 மாதமாக வேலை தேடியும் தொடர் தோல்விகளை சந்தித்தேன். அப்போது, என்னைச் சுற்றி இருந்தவர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். சிலர் எதிர்மறையாக பேசினர். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், எனது பாதையிலேயே தொடர்ந்து பயணித்து எனது முடிவில் உறுதியாக இருந்தேன்.

பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

பெண்கள் தங்கள் நிதி சார்ந்த தேவைகளைத் தாங்களே பார்த்துக்கொண்டால் தான், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை அதிக அளவில் சந்திப்பதால், சத்தான உணவுப் பொருட்களையும், பழங்களையும் பெண்கள் சாப்பிடுவது அவசியம். ஆனால் பல பெண்கள் இத்தகைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக்கூட, குடும்பத்தினரையே சார்ந்து இருக்கின்றனர். இதில் இருந்து வெளியே வருவதற்கு அவர்கள் முயற்சிப்பது இல்லை. எனவே தங்களை அறியாமலேயே மற்றவர்களின் கட்டுப்பாட்டிலும், அவர்களைச் சார்ந்தும் வாழ்கின்றனர். அதனால் சுய சிந்தனை, தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். இதன் விளைவாக மன அழுத்தமும் அதிகரிக்கும். இதைத் தவிர்க்கவே பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

இளைய தலைமுறைக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதால், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கான நேரம் குறைகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போகிறது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க நல்லவற்றை கேட்டு, படித்து, நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். சிந்தனைகளை சரியாக செதுக்கினால் அனைவரும் சிற்பமாக ஜொலிக்க முடியும்.

பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படாமல், மனநலம் எவ்வளவு முக்கியம் என்பதையும், அதை சீராக வைத்து பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டும். இதைப் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்.

Tags:    

மேலும் செய்திகள்