விர்ச்சுவல் ரியாலிட்டி ஓவியங்களை உருவாக்கும் அன்னா ஜிலியாவா
புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்ட அன்னா, தனது 14 வயதில் ரஷியாவில் உள்ள கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் கல்லூரியிலேயே இளம் வயதில் தேர்ச்சி பெற்ற மாணவி அன்னா தான்.
மனிதன் தோன்றிய காலத்தில், தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட ஓவியக்கலை, தற்போது பல பரிமாண வளர்ச்சிகளை அடைந்து பரந்து விரிந்துள்ளது. கால மாற்றத்துக்கேற்ப இதிலும் பல புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளது. குகைகளில் கற்களை கொண்டு வரைய ஆரம்பித்த ஓவியக் கலையை பென்சில், கிரையான்ஸ், ஸ்கெட்ச், பெயிண்ட், 3D ஆர்ட் போன்ற படிநிலைகளைத் தாண்டி, அடுத்த உயரத்திற்கு எடுத்து சென்று இருக்கிறார், ரஷிய-பிரெஞ்சு கலைஞரான அன்னா ஜிலியாவா.
புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்ட அன்னா, தனது 14 வயதில் ரஷியாவில் உள்ள கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அந்தக் கல்லூரியிலேயே இளம் வயதில் தேர்ச்சி பெற்ற மாணவி அன்னா தான். பிறகு மாஸ்கோவில் உள்ள ஒரு அகாடமியில் சிற்பம் மற்றும் பெயிண்டிங் மறுசீரமைப்பு முதலியவற்றை கற்று தேர்ச்சி பெற்றார். கலைகளில் பல்துறையின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட அன்னா, திரைப்படம் தயாரித்தல், கட்டிடக்கலை, விளையாட்டு வரைகலை, வடிவமைப்பு போன்றவற்றை முறையாக கற்றுக்கொண்டு தனது திறமையை மெருகேற்றிக் கொண்டார்.
கார்ட்டூன் ஓவியர், கேம் வடிவமைப்பாளர் மற்றும் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். புதியவற்றை தேடித் தேடி கற்றுக் கொள்ளும் அன்னாவிற்கு அறிமுகமானது, விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்.
விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது ஒரு டிஜிட்டல் உலகமாகும். இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்றால் விர்ச்சுவல் கருவியை அணிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே விர்ச்சுவல் ரியாலிட்டி உலகத்தை பார்க்க முடியும். மற்றவர்களால் அதைக் காண முடியாது.
அன்னா, இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி உலகத்தை பயன்படுத்தி ஓவியம் வரைய கற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும், தனது ஆர்வத்தால் விரைவிலே முழுமையாக கற்றுத் தேர்ந்தார்.
விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஓவிய சிற்பங்களை வரைவதற்கு ஒரு இடத்தை தயார் செய்தார். இதனை அவர் 'வால்யூம்சம்' என்று கூறுகிறார். இவர் வரையும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஓவிய சிற்பங்களில் என்ன விசேஷம் என்றால், இவர் மட்டுமே காணக்கூடிய அந்த விர்ச்சுவல் உலகத்தை, விர்ச்சுவல் கேமராவை பயன்படுத்தி அவர் என்ன வரைகிறார் என்று வெளியே இருக்கும் மற்றவர்களாலும் பார்க்க முடியும்.
அன்னா ஜிலியாவா தனது முப்பரிமாண விர்ச்சுவல் ரியாலிட்டி ஓவியத்தை பல நாடுகளிலும் நேரலையாக நிகழ்த்தியுள்ளார். 2019-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த வேர்ல்ட் ஸ்கில்ஸ் போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சியில், 45,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு நடுவே, தனியாக தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஓவிய நிகழ்ச்சியை நடத்தினார்.
இவ்வாறு ஜெர்மனி, துருக்கி, இந்தியா, இத்தாலி, போலந்து, போர்ச்சுகல், துபாய், தைவான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் தனது ஓவிய நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். இந்த உலகத்தில் 'புதுமை மற்றும் மாற்றம்' தான் நிரந்தரமானது என்பதை அன்னா ஜிலியாவா தனது ஓவியத்தால் நிரூபித்திருக்கிறார்.