மனித வேட்டையை விலங்குகள் விரும்புவதில்லை - ராதிகா ராமசாமி
திருமணம் முடிந்து டெல்லிக்குப் போன பிறகும், டெல்லி தேசியப் பூங்கா, ரத்தன்பூர் தேசிய பூங்கா என்று நிறைய இடங்களுக்குச் சென்று காட்டு விலங்குகளைப் படம் எடுத்தேன்.
"பூமிக்கும், மனிதனுக்கும் முக்கியமானவை காடுகள். அவற்றின் பிரமாண்டம் வார்த்தைகளுக்குள் அடங்காதது" என்கிறார் வனவியல் புகைப்படக்கலைஞர் ராதிகா ராமசாமி. சர்வதேச அளவில் பிரபலமான இவர், வனவியல் புகைப்படக்கலை தொடர்பான போட்டிகளில் பங்கேற்பாளராகவும், நடுவராகவும் செயல்பட்டு வருகிறார். தேனி மாவட்டம் வெங்கடாஜலபுரத்தில் பிறந்து வளர்ந்த ராதிகா, வனவியல் புகைப்படக்கலை காரணமாக காடுகளையே தனது முகவரியாகக்கொண்டு, உலகம் முழுவதும் பயணிக்கிறார். இனி அவருடன் பேசுவோம்.
வனவியல் புகைப்படக் கலையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எவ்வாறு?
இயற்கை, பறவைகள், பூக்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா எனக்கு ஒரு பிலிம் காமிரா வாங்கிக்கொடுத்தார். அதன் மூலம் வீட்டைச் சுற்றி இருக்கும் செடி கொடிகளையெல்லாம் படம் பிடித்தேன். அவற்றின் மீது உட்காரும் வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள்தான் புகைப்படக் கலையில் என்னுடைய முதல் மாடல்கள்.
2004-ம் ஆண்டு எனது முதல் டி70 ரக டிஜிட்டல் கேமிராவை வாங்கினேன். அதுவரை ஆரம்ப நிலையில் இருந்த எனது புகைப்படக்கலை ஆர்வம், புகைப்படம் எடுப்பதே வாழ்க்கையாக ஆகும் அளவுக்கு மாறியது. என் ரசனைக்கும், காமிராவுக்கும் தீனி போட்டது பறவைகள்தான். நிறைய பறவைகளை படம்பிடித்துக்கொண்டு இருந்த எனக்குள் வனவியல் புகைப்படக் கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
திருமணம் முடிந்து டெல்லிக்குப் போன பிறகும், டெல்லி தேசியப் பூங்கா, ரத்தன்பூர் தேசிய பூங்கா என்று நிறைய இடங்களுக்குச் சென்று காட்டு விலங்குகளைப் படம் எடுத்தேன். அந்த சமயத்தில் இந்தியாவில் வனவியல் புகைப்படக் கலைஞர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். அரிதான, சவாலான பணியாக இருந்ததால் அதை நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன். இவ்வாறு இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருக்கும் காடுகளில் உள்ள விலங்குகளையும், பறவைகளையும் என் காமிராவில் 17 வருடங்களுக்கும் மேலாகப் படம் பிடித்து வருகிறேன்.
சிங்கம், புலிகளை எவ்வளவு தூரத்தில் இருந்து புகைப்படம் எடுப்பீர்கள்?
தொட்டுவிடும் தூரத்தில் இருந்தே எடுக்கலாம். ஒரு காட்டுக்குள் நுழைவதற்கு முன் சில விதிமுறைகள் இருக்கின்றன. முறையான அனுமதி, வழிகாட்டி துணையுடன்தான் செல்ல வேண்டும். விலங்குகளிடம் நெருங்கும்போது உடல்மொழி முக்கியம். பெரும்பாலும் திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடிதான் வனவிலங்குகளைப் படம் எடுப்போம். மனித வேட்டையை விலங்குகள் விரும்புவதில்லை. நாம் அவற்றைத் தீண்டாதவரை அவை நம்மை தாக்காது. சில சமயங்களில் நாங்கள் உட்கார்ந்திருக்கும் வாகனத்தை உரசியபடிகூட சிங்கம், புலிகள் நடக்கும். வாகனத்தை விட்டு இறங்காதவரை உயிருக்கு உத்திரவாதம் உண்டு. வாகனம் அதுக்கு ஒரு பொருள் மட்டுமே.
காட்டில் எந்த விலங்கு ஆபத்தானது?
ஓநாய், காட்டு நாய் வகைகளிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும், பெரிய விலங்குகளையே ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சுற்றி வளைத்து கொன்று விடும். இரண்டு ஓநாய்களிடம் மாட்டினாலே ஒரு எலும்புகூட மிஞ்சாது. அடுத்ததாகக் காட்டெருமை. அது போகும் வழியில் நின்றாலோ, பசி நேரத்தில் நாம் அதன் கண்ணில் சிக்கினாலோ அவை மூர்க்கமாக நடந்துகொள்ளும். யானைகள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தே காலடி அதிர்வை வைத்து மனிதர் இருப்பதை உணர்ந்துகொள்ளும். குட்டிப்போட்ட யானை தூரத்தில் இருந்தாலும் ஆபத்து அருகில்தான்.
வனவியல் புகைப்படக்கலையில் ஈடுபடும்போது சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது உண்டா?
ஆப்பிரிக்க காட்டுக்கு ஒருசமயம் சென்றிருந்தபோது, தண்ணீர் குடிப்பதற்காக யானைக் கூட்டம் மலையை விட்டுக் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தது. அதில் பிறந்து ஒரு மாதமே ஆன யானைக் குட்டி ஒன்றும் இருந்தது. ஒரு பாதையை கடக்கும்போது அந்த யானைக் குட்டி சோர்வாகி வழியில் படுத்துக்கொண்டது. இருட்டுவதற்குள் தங்கள் இலக்கை கடந்துவிட வேண்டும் என்பதற்காகக் குட்டி யானையை, தாய் யானை தும்பிக்கையால் நகர்த்தி எழுப்ப முயற்சித்தது.
ஒரு கட்டத்தில் அந்தக் குட்டி யானையும் எழுந்துவிட்டது. அந்தக் காட்சியை பார்த்தபோது தூங்கிய குழந்தையை எழுப்பும்போது, அது கண்ணைக் கசக்கிக்கொண்டும், அழுதுகொண்டும் எழுந்திருப்பதைப் போல அவ்வளவு ரசனையாக இருந்தது. தாய்ப் புலியும், குட்டிப்புலிகளும் கொஞ்சுவதும், விளையாடுவதுமான காட்சிகளும் குழந்தைகள் நிறைந்த வீடு போல, பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.
விலங்குகளை படம் பிடிப்பதில் சந்திக்கும் சவால்கள்?
விலங்குகளிடம் 'இப்படி நில், இதுபோல போஸ் கொடு' என்று சொல்ல முடியாது. அவை எந்த நேரம் வரும் என்றும் சொல்ல முடியாது. லைட்டிங் மாற்ற முடியாது. வெயில், மழை என்று எந்தச் சூழ்நிலையையும் பார்க்காமல் கரடு முரடான மலை, முள் பாதையாக இருந்தாலும் பத்து கிலோ எடையுள்ள காமிராவை தூக்கிக்கொண்டு நடக்கவேண்டும். இத்தனை சவால்களும் ஒரு நல்ல 'ஷாட்' அமையும்போது, சாதித்ததுபோன்ற திருப்தியைத் தந்துவிடும்.
காடுகளிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது?
காலையில் ஏழு மணி வரை தூங்கிக்கொண்டிருந்த நான், வனவியல் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியதில் இருந்து சூரிய உதயத்திற்கு 'குட்மார்னிங்' சொல்லும் அளவுக்கு வாழ்க்கை முறை மாறியது. காட்டின் பிரமாண்டம், 'இந்தப் பிரபஞ்சத்தில் நீ சிறு புள்ளிதான்' என்ற யதார்த்தத்தையும், எளிமையையும் கற்றுக்கொடுத்தது. மழைக்கு, மண்ணுக்கு, மனிதர்களுக்கு காட்டின் வளம் மிக முக்கியம்.
ஆப்பிரிக்க காடுகள் நிறைய புல்வெளிகளும், பொட்டல் காடுகளும் நிறைந்ததாக இருக்கும். இந்தியக் காடுகள் மரங்கள் அடர்ந்து இருக்கும். இந்தியக் காடுகளில் அத்தனை சீக்கிரம் விலங்குகளை பார்த்துவிடமுடியாது. ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பாக நகரும். அதனால் இந்தியக் காடுகளை பெரிதும் ரசிக்கிறேன்; விலங்குகளை நேசிக்கிறேன்.