மன உறுதியால் லட்சியத்தை வெல்லலாம் - ஷிவானி
நாம் ஒன்றை அடைய விரும்பினால், மன உறுதியோடு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.
"ஆர்வம் இருந்தால் நம்மால் அனைத்தையும் கற்க முடியும். நீங்கள் ஒன்றை விரும்பினால், அதைப் பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். மற்றவர்களின் எதிர்மறையான கருத்துகளையும், விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் உங்களுக்கான பாதையில் முன்னேறிச் செல்லுங்கள்" என்கிறார் ஷிவானி.
இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டிட வடிவமைப்பியல் (ஆர்க்கிடெக்சர்) படித்து வருகிறார். ஓவியம் மற்றும் பரதக் கலையை முறையாகப் பயின்று அதில் அசத்தி வரும் ஷிவானி, இதற்காக பல பிரபலங்களிடம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார். இவரது தந்தை வையாபுரி திரைப்பட நடிகர். தாய் ஆனந்தி இல்லத்தரசி. இவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.
பென்சில் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், அக்ரலிக் மற்றும் ஆயில் பெயிண்ட் ஓவியங்கள் என்று பலவிதமாக வரைந்து வரும் ஷிவானியுடன் ஒரு சந்திப்பு.
ஓவியக்கலை மீது ஆர்வம் வந்தது எப்படி?
"என்னுடைய அம்மா ஆனந்தி, கார்ட்டூன் படங்கள் வரைவதில் வல்லவர். நான் மழலையர் பள்ளியில் படிக்கும்போதே அவர் ஓவியம் வரைவதை ஆர்வத்துடன் கவனிப்பேன். அதுபோல நாமும் ஓவியங்கள் வரைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான்காம் வகுப்பு படிக்கும்போது பென்சில் மூலம் சிறு சிறு ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். அதைப்பார்த்து என் பெற்றோரும், சகோதரரும் வியந்து பாராட்டினார்கள். 'நான் மேலும் பல ஓவியங்கள் வரைய வேண்டும்' என்று ஊக்குவித்தார்கள்.
என்னுடைய தந்தை, எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஓவியப் பயிற்சி வகுப்பில் என்னைச் சேர்த்து விட்டார். ஆனால் அங்கு அடிப்படை பயிற்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டதால், எனது திறமையை வளர்த்துக்கொள்வதற்காக தகுந்த பயிற்சி வகுப்பைத் தேடினேன்.
'புகழ் பெற்ற ஓவியர்கள் போல கண்ணையும், கருத்தையும் கவரும் ஓவியங்கள் வரைவதற்குப் பழக வேண்டும்' என்ற எனது ஆர்வத்தை தந்தையிடம் தெரிவித்தேன். என்னுடைய ஆவலைப் புரிந்துகொண்ட அவர், பிரபலமான ஓவியக் கலைக்கூடத்தில் என்னைச் சேர்த்து விட்டார். அங்கு பணியாற்றிய ஓவிய ஆசிரியர் வெங்கடாஜலபதி, எனக்கு பல்வேறு ஓவிய நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார். ஓவியக் கலையில் நான் டிப்ளமோ மற்றும் டிகிரி முடிப்பதற்கு உதவினார்.
கலர் பென்சில், ஷேடிங் பென்சில், வாட்டர் கலர், அக்ரலிக் பெயிண்ட், ஆயில் பெயிண்ட் ஆகியவற்றை கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறேன்.
மனிதர்களைப் பார்த்து அப்படியே வரையும் 'போட்டோ ஸ்கெட்சஸ்' ஓவியங்கள் மீது எனக்கு அதிக விருப்பம் உண்டு. எனது பெற்றோர் மற்றும் குருவின் ஓவியங்களை முதன்முதலில் இவ்வாறு வரைந்தேன்.
கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தினாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓவியங்கள் வரைகிறேன். ஓவியக்கலை என் உயிர் மூச்சாகவே மாறிவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களிடம் எனது ஓவியங்களுக்காக பாராட்டு பெற்றிருக்கிறேன்.
பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்றது குறித்து சொல்லுங்கள்?
ஓவியத்தைப் போலவே, நடனத்தின் மீதும் எனக்கு அதிக விருப்பம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே பரதநாட்டியத்தை முறைப்படி கற்று பட்டம் பெற்று அரங்கேற்றம் செய்தேன்.
கட்டிட வடிவமைப்பியல் துறையைத் தேர்வு செய்ய காரணம் என்ன?
'ஆர்க்கிடெக்சர்' படிப்பு, வரையும் கலையை அடிப்படையாகக் கொண்டது. புதுமையான, வித்தியாசமான கட்டிட வரைபடங்களை தயாரிக்கும் சவாலான துறை இது. இதற்கு நான் கற்ற ஓவியக்கலை பெரிதும் உதவுகிறது. கடினமான இந்தப் படிப்பை படிக்கும்போது சோர்வு அடையாமல், சுறுசுறுப்பாக இருப்பதற்கு பரதநாட்டியக் கலை உதவுகிறது. தினமும் இரவு பன்னிரெண்டு மணி வரை படித்துவிட்டு, மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து படிக்கிறேன்.
நாம் ஒன்றை அடைய விரும்பினால், மன உறுதியோடு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.
நான் பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளேன். எனது அனைத்து ஓவியங்களையும் காட்சிப்படுத்தும் விதமாக ஓவியக்கண்காட்சி நடத்த வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் இருக்க, பரதநாட்டியம் ஆடுவதைத் தொடர வேண்டும். கட்டிட வடிவமைப்பியல் துறையில் புகழ் பெற வேண்டும். இவையே எனது லட்சியங்கள்" என்று கூறிய ஷிவானியை வாழ்த்தி விடைபெற்றோம்.
ஓவியக்கலை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- ஓவியக்கலையானது படைப்பாற்றல், சமூக வளர்ச்சி மற்றும் சுய மதிப்பை ஊக்குவிக்கும். கை மற்றும் கண்களுக்கான ஒருங்கிணைப்பை அதிகரிக்கும்.
- ஓவியர் லியோனார்டோ டாவின்சி, மோனாலிசா ஓவியத்தின் மந்திரப் புன்னகைப் புரியும் உதடுகளை வரைய கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆனதாம். இவர் ஒரு சைவப் பிரியர். விலங்குகளின் உரிமைக்காக போராடியவர். கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளைப் பணம் கொடுத்து வாங்கி, அவற்றை சுதந்திரமாக பறக்கவிட்டு ரசித்தவர்.
- ஓவியம் வரைவதற்கு அனைவரும் பயன்படுத்தும் பென்சில், முதன்முதலாக 1565-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பென்சிலைக் கொண்டு தண்ணீருக்கு அடியிலும் எழுத முடியும்.
- 3500 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் மிகச்சிறந்த கலை ஓவியங்களில், கேரள மாநிலத்தின் பாரம்பரியமான 'முரல்' ஓவியங்களும் ஒன்று. சுவரோவியங்களான இவை 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. தொன்மங்கள் மற்றும் புனைவுகளை சித்தரிப்பதில் புகழ்பெற்ற இந்த ஓவியங்கள், இயற்கை நிறமிகள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்களால் வரையப்படுகின்றன.
- பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்திய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
- 'பட்டாசித்ரா' என்பது ஒடிசா மாநிலத்தின் நூற்றாண்டு பழமையான ஓவியக்கலையாகும். இதில் காவியங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை பனை ஓலை மூலம் சித்தரித்து இருப்பார்கள்.