ஆச்சரியமூட்டும் சாதனை படைத்த ஆரத்தி சஹா

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனைக்கு முன்னோட்டமாக, 1959-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், கொல்கத்தா தேசபந்து பூங்காவில் உள்ள குளத்தில் ஆரத்தி சஹா தொடர்ந்து 16 மணி நேரம் நீந்தினார்.

Update: 2022-06-06 05:30 GMT

சுதந்திர இந்தியாவில் பெண்கள் படைத்து வரும் சாதனைகள் மகத்தானவை. அத்தகைய சாதனைகளுக்கு தொடக்கம் அமைத்து கொடுத்தவர் நீச்சல் வீராங்கனை ஆரத்தி சஹா (24.9.1940 - 23.8.1994). உறைய வைக்கும் குளிரும், ஆபத்தான கடல் வாழ் உயிரினங்களும் கொண்ட ஆங்கில கால்வாயை, 1959-ம் ஆண்டு நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்மணி இவர்.

கொல்கத்தாவில் பிறந்த ஆரத்தி சஹாவின் அப்பா ராணுவ வீரர். இளம் வயதில் தாயை இழந்த காரணத்தால், தாய் மாமாவின் கவனிப்பில் வளர்ந்து வந்தார் ஆரத்தி. நீச்சல் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட ஆரத்தி சஹாவுக்கு அவரது மாமா பயிற்சி அளித்தார். அதன் அடுத்த கட்டமாக உள்ளூர் நீச்சல் சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார்.

சச்சின் நாக் என்பவரிடம் தொடக்கத்தில் பயிற்சி பெற்ற ஆரத்தி, 1945-ம் ஆண்டு முதல் 1951-ம் ஆண்டு வரை 100 மீட்டர் பிரீ ஸ்டைல், 200 மீட்டர் பிரீ ஸ்ட்ரோக், 200 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டிகளில் வென்று தேசிய சாதனை புரிந்தார். 22 மாநிலப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அடுத்து, தனது 12 வயதில் 1952-ம் ஆண்டு நடைபெற்ற சம்மர் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீ ஸ்ட்ரோக் போட்டிக்குத் தேர்வானார்.

ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனைக்கு முன்னோட்டமாக, 1959-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி அன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், கொல்கத்தா தேசபந்து பூங்காவில் உள்ள குளத்தில் ஆரத்தி சஹா தொடர்ந்து 16 மணி நேரம் நீந்தினார்.

அதன் பின்னர் இங்கிலாந்து சென்றார். அங்கு, ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற முதல் முயற்சியில் அவரால் வெற்றி பெற இயலவில்லை.

ஆரத்தி சஹா தனது இரண்டாவது முயற்சியை 1959-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி மேற்கொண்டார். பிரான்சு நாட்டின், கேப் கிரிஸ் நெஸ் பகுதியில் ஆரம்பித்து 16 மணி 20 நிமிடங்கள் கடும் அலைகளை நீந்திக் கடந்து 42 மைல் தூரத்தில் உள்ள இங்கிலாந்து, சாண்ட்கேட் பகுதி கடற்கரையை அடைந்தார். அந்த சாதனைக்குச் சான்றாக அங்கு இந்தியக் கொடியை ஏற்றினார்.

அவரது சாதனையை அறிந்த ஜவகர்லால் நேரு, விஜயலட்சுமி பண்டிட் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அடுத்த நாள் அகில இந்திய வானொலியில், ஆரத்தி சஹாவின் சாதனை அறிவிக்கப்பட்டது.

1960-ம் ஆண்டு ஆரத்தி சஹாவை கவுரவிக்கும் விதத்தில் இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கியது. 1999-ம் ஆண்டு அவரது சாதனையை நினைவுகூரும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது. தனது மேனேஜரையே வாழ்க்கைத் துணையாக ஏற்ற ஆரத்தி சஹாவுக்கு, அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார்.

ஆரத்தி சஹாவின் சாதனைக்கு மதிப்பளிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் 2020-ம் ஆண்டு அவரது

80-வது பிறந்த தினத்தில், 'கூகுள் டூடுல்' என்ற வகையில் அவரது படத்தை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்