கனவையும், கற்பனையையும் நிஜமாக்கிய பெண்

மருத்துவராக பணியாற்றியபோதும், அவரது சிறு வயது கனவான ‘விண்வெளிக்கு செல்ல வேண்டும்’ என்பது, அவரை அந்தப் பாதையை நோக்கி செலுத்தியது. 1985-ம் ஆண்டு விண்வெளி வீராங்கனையாவதற்காக விண்ணப்பித்த ஜெமிசனுக்கு ஏ

Update: 2022-07-17 01:30 GMT

டிக்கும்போது மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ வரவேண்டும் என்று பலர் ஆசைப்படுவார்கள். ஆனால், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மே ஜெமிசன் மருத்துவம், பொறியியல் என இரண்டு துறைகளிலும் தேர்ச்சி பெற்று, தனது கனவான விண்வெளி வீராங்கனையாகவும் உருவாகி சாதித்து காட்டியிருக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கை:

அமெரிக்காவில் உள்ள அலபாமா நகரில், 1956-ம் ஆண்டு பிறந்த ஜெமிசனின் தந்தை மேலாளராகவும், தாய் மழலையர் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர். ஜெமிசன், விண்வெளித் துறையில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். அதனால், 'விண்வெளிக்கு செல்ல வேண்டும்' என்ற கனவுடன் வளர்ந்தார். பள்ளி படிப்பை முடித்தவுடன் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியலிலும், கலையிலும் இளங்கலை பட்டம் பெற்றார்.

அனைத்தையும் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட மே ஜெமிசன், கார்னெல் மருத்துவப் பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். அதே நேரத்தில், கம்போடியாவில் உள்ள அகதிகள் முகாமில் பணியாற்றினார். ஏற்கனவே என்ஜினீயர் பட்டம் பெற்ற இவர், 1981-ம் ஆண்டு மருத்துவப் பட்டமும் பெற்றார். பின்பு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள அமைதிப்படையில் இரண்டு வருடம் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.

விண்வெளி வீராங்கனை கனவு:

மருத்துவராக பணியாற்றியபோதும், அவரது சிறு வயது கனவான 'விண்வெளிக்கு செல்ல வேண்டும்' என்பது, அவரை அந்தப் பாதையை நோக்கி செலுத்தியது. 1985-ம் ஆண்டு விண்வெளி வீராங்கனையாவதற்காக விண்ணப்பித்த ஜெமிசனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனென்றால், அதே ஆண்டு நாசா விண்வெளிக்கு அனுப்பிய 'ஸ்பேஸ் ஷட்டில் சேலஞ்சர்' விண்கலம், விண்வெளி வீரர்களுடன் வெடித்துச்சிதறியது. அதனால் தற்காலிகமாக எந்த புதிய விண்வெளி வீரரையும் அந்த ஆண்டு நியமிக்கவில்லை.

மனம் தளராத மே ஜெமிசன், தொடர்ந்து 1986-ம் ஆண்டு மறுபடியும் விண்ணப்பித்தார். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் மே ஜெமிசனும் இடம்பெற்றார். இவர்தான் நாசாவின் முதல் கருப்பின விண்வெளி வீராங்கனை. செப்டம்பர் 12, 1992-ம் ஆண்டு எஸ்.டி-47 எண்டெவர் விண்கலத்தில் பிற விண்வெளி வீரர்களுடன் பறந்து சென்றார். விண்வெளிக்கு சென்ற முதல் கருப்பின பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

நாசாவில் இருந்து 1993-ம் வருடம் விடை பெற்று தனியாக ஜெமிசன் குழுமம் என்ற ஆலோசனை நிறுவனத்தை நிறுவி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றம் முதலியவற்றை ஊக்குவித்து வந்தார்.

தற்போது, தனது அம்மாவின் ஞாபகமாக டோரத்தி ஜெமிஷன் அறக்கட்டளையை நிறுவி, அதில் சமூக சேவையாற்றி வருகிறார். தனது விண்வெளி அனுபவத்தை அவர் புத்தகங்களாகவும் எழுதியுள்ளார். 'தேசிய பெண்களின் துணிச்சலான விருது' மற்றும் 'கில்பி அறிவியல் விருது' போன்று பல விருதுகளும், கவுரவ பட்டங்களும் பெற்றுள்ளார். மருத்துவராக, பொறியாளராக, விண்வெளி வீராங்கனையாக, பேராசிரியராக, அறிவியல் விஞ்ஞானியாக பணியாற்றி, தான் கண்ட கனவு அனைத்தையும் நனவாக்கி தனது வாழ்வின் லட்சியத்தை அடைந்துள்ளார் மே ஜெமிசன். 

Tags:    

மேலும் செய்திகள்