யோகாவில் சாதிக்கும் 7 வயது சிறுமி

2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலக யோகா தினத்தில், 75 ஆசனங்களை 10 நிமிடங்களில் செய்துகாட்டி எல்லோரையும் அசத்தினார். யோகா மட்டுமில்லாமல் ஸ்கேட்டிங் மற்றும் ஓவியம் போன்றவற்றையும் ஆர்வத்தோடு கற்று வருகிறார் ரவீணா.

Update: 2022-07-10 01:30 GMT

யோகாவின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, அதில் பல சாதனைகள் புரிந்து வருவதோடு, சமூகத்துக்கு அதன்மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் ரவீணா. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த விஜயன்-ரம்யா தம்பதியின் மகளான ரவீணா இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

ரவீணாவுக்கு 4 வயது இருக்கும்போது யோகா வகுப்பில் சேர்த்தனர் பெற்றோர். பயிற்சி வகுப்பில் ரவீணா ஆர்வத்தோடு ஈடுபடுவதைக் கண்ட அவரது யோகா ஆசிரியர்கள் கயல்விழி மற்றும் சுரேஷ்குமார் இருவரும் தொடர்ந்து அவரை உற்சாகப்படுத்தி வந்தனர். ரவீணாவின் திறமையை வெளி உலகிற்குக் கொண்டு வருவதற்காக பல சாதனைகள் செய்வதற்கு அவரை தயார்படுத்தினர்.

தான் கற்றுக்கொண்ட யோகா மூலம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரவீணா நடத்தி வருகிறார். கொரோனா நோயின் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு, யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உதவும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்து, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். கண்ணாடி, மண்பானை, செங்கல் போன்றவற்றின் மீது இருந்தபடி பல யோகாசனங்கள் செய்திருக்கிறார். தற்போது வரை யோகாவில் 5 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலக யோகா தினத்தில், 75 ஆசனங்களை 10 நிமிடங்களில் செய்துகாட்டி எல்லோரையும் அசத்தினார். யோகா மட்டுமில்லாமல் ஸ்கேட்டிங் மற்றும் ஓவியம் போன்றவற்றையும் ஆர்வத்தோடு கற்று வருகிறார் ரவீணா.

'18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி சமீபத்தில், காலில் ஸ்கேட்டிங் மாட்டிக் கொண்டு கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து உலக சாதனை நிகழ்த்தினார். அதற்காக அவர் தமிழக சட்டப் பேரவைத் தலைவரிடம் இருந்து கோப்பையையும், சான்றிதழையும் பெற்றார். மூன்று பானையின் மீது அமர்ந்து யோகா செய்ததன் மூலமாக உலக சாதனையும் படைத்தார். கனடா நாட்டைச் சார்ந்த 'யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' இந்தச் சாதனையை அங்கீகரித்து ரவீணாவைப் பாராட்டிச் சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கியது. இந்தச் சான்றிதழை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.

யோகா மற்றும் ஸ்கேட்டிங்கில் ரவீணா செய்த சாதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பாராட்டி இன்டர்நேஷனல் யுசி பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. 5 வயதிலேயே 'யோகா கலைமணி' என்ற பட்டத்தைப் பாரதியார் இலக்கிய மன்றம் அவருக்கு வழங்கியது. 10 நிமிடங்களில் 100 ஆசனங்கள் செய்து காட்டியதற்காக ஆந்திர மாநிலத்தில் ரவீணாவுக்கு 'நந்தி விருது' வழங்கப்பட்டது. மேலும், யோகாவில் பல சாதனைகள் நிகழ்த்தியதற்காக 'நடராஜா' விருதும் வாங்கியிருக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்