திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்
'ஐடென்டிட்டி' திரைப்படம் மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் 'ஐடென்டிட்டி'. இந்த படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். இவர்களது கூட்டணியில் கடந்த 2020 ம் ஆண்டு வெளியான 'பாரின்ஸிக்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி 'ஐடென்டிட்டி' திரைப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இப்படத்தினை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் டோவினோ தாமஸ் 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகின.
ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் திரிஷா குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார். அந்த குழுவில் படம் வரையும் ஆளாக இருக்கிறார் டோவினோ தாமஸ். குற்றவாளி யார் கதையின் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையில் இப்படம் வருகிற ஜனவரி மாதம் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.