'இது கன்னட சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய பொறுப்பை எனக்கு அளிக்கிறது' - பிரபல நடிகை
உபேந்திரா இயக்கி நடித்த 'யுஐ' படத்தில் கதாநாயகியாக ரீஷ்மா நானையா நடித்திருந்தார்.;
சென்னை,
பிரபல கன்னட நடிகை ரீஷ்மா நானையா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'ஏக் லவ் யா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதன்பிறகு, பல படங்களில் நடித்திருக்கும் இவர் நடனத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தற்போது இவர் உபேந்திரா இயக்கி நடித்த 'யுஐ' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்நிலையில், கன்னட சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பான் இந்திய படங்களில் நடிப்பது பெரிய பொறுப்பை தரும் என்று நடிகை ரீஷ்மா நானையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கன்னட சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பான் இந்திய படங்களில் நடிப்பது எனக்கு பெரிய பொறுப்பை அளிக்கிறது. அது அதிக மக்களிடம் நம்மை கொண்டு செல்ல உதவுகிறது. கன்னடத்தில் சில அற்புதமான படங்களை எடுத்துள்ளனர், அதில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் ' என்றார்.
நடிகை ரீஷ்மா நானையா அடுத்ததாக கேடி - தி டெவில் படத்தில் நடித்து வருகிறார். இதுவும் ஒரு பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இதில் இவருடன், துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.