அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கொடுத்த விளக்கம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Update: 2024-12-17 02:07 GMT

புதுச்சேரி,

2012-ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெளியான 'போடா போடி' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். 2022-ம் ஆண்டு நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார். விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு உரிமையான `சீகல்ஸ்' ஓட்டலை விலை கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதற்கு பதில் அளித்து விக்னேஷ் சிவன் அவரது தரப்பில் அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது, " இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை சந்தித்து புதுச்சேரியில் சில இடங்களில் படப்பிடிப்பு செய்ய அனுமதிகளையும், கலை நிகழ்ச்சிகளை நடத்த இடங்களை பற்றி விசாரித்தார். அப்பொழுது அவருடன் வந்த உள்ளூர் சினிமாத்துறை நபர் புதுச்சேரி சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விற்க போகிறீர்களா? அப்படி விற்றா என்ன விலை போகும்? என்று கேட்டார். அரசாங்கத்தின் இடத்தை யாருக்கும் விற்க அனுமதி இல்லை. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு சொத்துகளும் குடியரசு தலைவரின் பெயரில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்