சூர்யா விஜய் சேதுபதியின் 'பீனிக்ஸ்' டீசர் வெளியானது
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகியுள்ள 'பீனிக்ஸ்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.;
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் 'பீனிக்ஸ்' என்ற படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'பீனிக்ஸ்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
டீசரின் தொடக்க காட்சியே சிறுவர் சீர்த்திருத்த சிறையுடன் தொடங்குகிறது. கையில் விலங்குடன் குற்றவாளியாக சீர்த்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் அறிமுகம் உள்ளது. அதற்கு அடுத்த காட்சியிலே சூர்யாவின் சண்டை காட்சிகளும், அவர் பாக்ஸிங் வீரர் என்பதற்கான காட்சிகளும் காட்டப்படுகிறது. பாக்ஸிங் காட்சிகளுக்காக ஒரு பாக்ஸிங் வீரரைப் போல சூர்யா உழைத்திருக்கிறார் என்பதை அந்த காட்சி நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது. சூர்யாவின் வேகமான பஞ்ச்கள் அவரது உழைப்பை காட்டுகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், அப்பா விஜய் சேதுபதிக்கு மகன் சூர்யா பொன்னாடை போர்த்தி தந்தையர் தின வாழ்த்து தெரிவித்தார்.