தாய்லாந்து சுற்றுலா ஆலோசகராக பிரபல நடிகர் சோனு சூட் நியமனம்
தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம், நடிகர் சோனு சூட்டின் சுற்றுலா ஆலோசகர் நியமனத்தை அறிவித்துள்ளது.;
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதி உதவி, பஸ் வசதி உள்பட பல உதவிகளை வழங்கி , நாடு முழுவதும் பிரபலமடைந்தார். இவர் தமிழில் கள்ளழகர், ஒஸ்தி, அருந்ததி, தேவி, தமிழரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
புகழ்பெற்ற நடிகரும், சமூக சேவகருமான சோனு சூட், தாய்லாந்து சுற்றுலாவுக்கான அதிகாரபூர்வ சுற்றுலா ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்த நியமனத்தை அறிவித்து, நாட்டின் கௌரவ சுற்றுலா ஆலோசகராக சோனு சூட்டை நியமித்து சான்றிதழை வழங்கியது. இந்த பணியில், இந்தியாவில் தாய்லாந்து சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அவர் மேற்கொள்வார்.
சோனு சூட் எக்ஸ் தளத்தில் தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்து, "தாய்லாந்தின் சுற்றுலாத் துறைக்கான பிராண்ட் அம்பாசிடர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் பெருமை " எனக் குறிப்பிட்டுள்ளார்.