சிவகார்த்திகேயனின் "பராசக்தி" ரிலீஸ் அப்டேட்
"பராசக்தி" படம் பொங்கலுக்கு வெளியாகும் என மறைமுகமாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அறிவித்துள்ளார்;

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவரும் 'ஜன நாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருமென நேற்று அறிவித்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இலங்கையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தியும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.அதன்பின்னரே 'ஜன நாயகன்' படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்தது.
ஆனால், 'பராசக்தி' படக்குழு 'ஜன நாயகன்' ரிலீஸ் தேதி அறிவிப்புக்குப் பின் மீண்டும் உறுதியாக 'பராசக்தி' பொங்கலுக்கு வெளியாகும் என மறைமுகமாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் ஒரே நேரத்தில் வெளியானால் அவைகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி உருவாகப்போவது உறுதி. இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.