நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமீன் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நடிகர் சித்திக்கை கைது செய்ய விதித்த தடையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு வெளியிட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை கடந்த ஆகஸ்டு இறுதியில் வெளியிடப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு கூறியதன்படி, அதனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்து உள்ளது.
ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இளம் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், மூத்த நடிகர் சித்திக்கிற்கு எதிராக கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள மியூசியம் போலீசார் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி வழக்கு பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம் மற்றும் குற்ற நோக்குடன் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவானது.
2019-ம் ஆண்டிலும் அந்த நடிகை பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசினார். ஆனால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர் புதிய மீடூ சர்ச்சை மலையாள திரையுலகை ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த நடிகை போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இதனையடுத்து தலைமறைவான நடிகர் சித்திக்கிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.
அதன்பிறகு சித்திக், சிறப்பு புலனாய்வு குழு முன்பு கடந்த மாதம் 7 மற்றும் 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமீன் மனு காலம் முடிந்ததால், உச்ச நீதிமன்றத்தில் இன்று முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திக்கின் இடைக்கால முன்ஜாமீனை ஒரு வாரம் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.