'சிக்கந்தர்' படத்திற்கு பின்னணி இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'சிக்கந்தர்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்துக்கு 'சிக்கந்தர்' என்று 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது. இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.
மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் மும்பை ரெயில் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சிக்கந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.