பிரியங்கா சோப்ரா பெண்களுக்கான ரோல்மாடல் - நடிகை சமந்தா

பிரியங்கா சோப்ரா போன்ற அதிகார, ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், பழகுவதும் அலாதி மகிழ்ச்சிக்குரியது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

Update: 2024-11-10 10:09 GMT

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மயோடிசிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த சமந்தா ஆன்மீகம், உடற்பயிற்சி யோகா ஆகியவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா புதிய படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இந்தி பதிப்பான 'சிட்டாடல் ஹனி பனி'யில் சமந்தா நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளர். இது இவர்களது கூட்டணியில் 2-வது முறையாக உருவாகும் தொடராகும்.


பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியான 'சிட்டாடல்' வெப் தொடர் உலகளவில் ரசிகர்களை ஈர்த்தது. இதன் அடுத்த பாகமாக 'சிட்டாடல் ஹனி பன்னி' தற்போது வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

'சிட்டாடல்' வெப் தொடர் விழாவில் சமந்தா கலந்து கொண்டு தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசினார். சமந்தா பேசும்போது, "சிட்டாடல் உலகளவில் ரசிகர்களை கவர்ந்த வெப் தொடர். இதில் நானும் முக்கிய பங்கு வகித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரியங்கா சோப்ரா பெண்களுக்கு ஒரு சிறந்த ரோல் மாடல் ஆவார். அவர் நம்மை பெரியளவில் சிந்திக்கவும் தூண்டுகிறார். அவர் போன்ற அதிகார, ஆளுமைமிக்க பெண்களை சந்திப்பதும், பழகுவதும் அலாதி மகிழ்ச்சிக்குரியது.

திறமைமிக்கவர்களுடன் பழகும்போது, நமது சவாலும் பெரிதாகி கொண்டு போகிறது. எனவே ஆளுமைமிக்கவர்களின் நட்பு சிறிது நேரம் கிடைத்தாலும் நல்லது. வாழ்க்கையில் சவால்கள் எப்போதுமே முக்கியமானது", என்றார்.

சமந்தா தற்போது 'தும்பத்' என்ற இன்னொரு வெப் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்