நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.;
சென்னை,
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
தற்போது சமந்தா 'சிட்டாடல் ஹனி பன்னி' என்ற பாலிவுட் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இது கடந்த 7-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இதில் சமந்தாவின் மகளாக காஷ்வி மஜ்முந்தர் நடித்திருந்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்துள்ளார்.
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், அதை குறிக்கும் விதமாக, 'மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா' என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.இதை பார்த்ததுமே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, சமந்தாவுக்கு ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது