விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் சாய்பல்லவி

'அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Update: 2024-10-19 02:30 GMT

சென்னை,

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலும் இப்படத்தின் முதல் பாடலுமான 'ஹே மின்னலே' வெளியாகி வைரலானது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது பாடலான 'வெண்ணிலவு சாரல்' வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் மட்டுமில்லாமல் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் மணிரத்னம் பேசுகையில், ' 'நான் சாய் பல்லவியின் மிகப்பெரிய ரசிகன். ஒரு நாள் உங்களுடன் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்' என்றார்.

இதனையடுத்து, விரைவில் மணிரத்னம் படத்தில் சாய் பல்லவியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்