பிரபல சின்னத்திரை நடிகைக்கு புற்றுநோய் பாதிப்பு - விரைவில் மீண்டுவர ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை நடிகை ஹினா கான், தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.;

Update:2024-06-28 15:41 IST

மும்பை,

பிரபல சின்னத்திரை நடிகை ஹினா கான், இந்தி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக இவர் நடித்த 'யே ரிஷ்டா கியா கெஹ்லாதா ஹை' என்ற தொலைக்காட்சி தொடர் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தியில் 'பிக் பாஸ்', 'கத்ரோன் கி கிலாடி' உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஹினா கான் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் 36 வயதான ஹினா கான், தனக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு மார்பக புற்றுநோய் 3-ம் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சவாலான நேரத்திலும், நான் நன்றாக இருக்கிறேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எனது சிகிச்சை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதில் இருந்து வலிமையுடன் மீண்டுவருவதற்கு தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

இந்த நேரத்தில் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதங்களை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் தனிப்பட்ட அனுபவங்களும், ஆதரவான கருத்துகளும் இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும். நானும், எனது குடும்பத்தினரும் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்கிறோம். கடவுளின் கிருபையால் நான் இந்த சவாலை எதிர்கொண்டு, நலமாக திரும்பி வருவேன் என்று நம்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகளையும், ஆசீர்வாதங்களையும், அன்பையும் வழங்குங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவிற்கு ரசிகர்கள் மற்றும் அவருடன் நடித்த துணை நடிகர், நடிகைகள் பலர் ஆறுதல் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு அனுபவங்களை பதிவிட்டு, நடிகை ஹினா கானை நம்பிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்