'மகாராஜா' படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்ற நித்திலன் சாமிநாதன்
மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 'மகாராஜா' திரைப்படம் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளது.
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் சிறந்த இயக்குநருக்கான விருது பட்டியலில், இம்தியாஸ் அலி, கபீர் கான், கரண் ஜோஹர், நித்திலன் சாமிநாதன், ராஜ்குமார் ஹிரானி, ராகுல் சதாசிவன், விது வினோத் சோப்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், அதிகப்படியான விருப்பத்தேர்வாக மகாராஜா தேர்வானதால், நித்திலன் சாமிநாதன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றுள்ளார். சந்து சாம்பியன் படத்தை இயக்கிய கபீர் கானும் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றுள்ளார்.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது.
'மகாராஜா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'மகாராஜா' படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்த விருது குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நித்திலன் சாமிநாதன் பேசியிருப்பதாவது, "மகிழ்ச்சியில் எனக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. எங்களின் 'மகாராஜா' திரைப்படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது எங்கள் படக்குழுவுக்கு நெகிழ்ச்சியான தருணம். இந்த அற்புதமான வாய்ப்பை வழங்கிய விஜய்சேதுபதி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை. இந்த வெற்றிக்கு அடித்தளமிட்ட குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், திரையுலகில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி. இந்த அங்கீகாரத்திற்காக, மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவின் நடுவர் மன்றத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இதுபோன்ற பாராட்டுகள், எதிர்காலத்தில் மேலும் பல நல்ல படங்கள் இயக்க என்னை ஊக்குவிக்கிறது" என்றார்.
தனித்துவமான, கதை சார்ந்த, சிறிய பட்ஜெட் படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக 'மகாராஜா' பட வெற்றி அமைந்திருக்கிறது. இது சினிமாவை நேசிக்கும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.