'நானும் ரவுடி தான்' எனது வாழ்வை ஆசிர்வதிக்க வந்த படம் - நடிகை நயன்தாரா
‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறியுள்ளார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுமில்லாமல் சர்ச்சையிலும் சிக்கியது. தற்போது, டியர் ஸ்டூடண்ட்ஸ், டாக்சிக், தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
'நானும் ரவுடி தான்' 21ம் தேதி அக்டோபர் 2015 அன்று வெளியானது. மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்தப்படம் அமைந்தது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'எனது வாழ்க்கையை ஆசிர்வதிக்கவும் மாற்றவும் வந்த படம் இது. 9 வருடங்களுக்கு முன்பு நானும் ரவுடி தான் ரிலீஸ் ஆனது. மக்களிடம் இருந்து புதிய அன்பைக் கொடுத்த படம். எப்போதும் மறக்க மாட்டேன். நடிகையாக புதிய பாடங்கள், அனுபவங்கள், புதிய நினைவுகள். அத்துடன் புதிய உறவு. எனக்கு இந்தப் படத்தையும் என்னவனையும் கொடுத்த விக்னேஷுக்கு நன்றி. சிறப்புவாய்ந்த படமென எப்போதும் தொடர்ந்து நினைவிருக்கம்படியான நினைவுகளுடன் நான் சேகரித்து வைத்திருந்த சில புகைப்படங்களை பகிர்க்கிறேன்' என்றார்.
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தை இயக்கி வருகிறார்.